![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/01/36956058-3-aus-crick-afp.webp)
காலே,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கவாஜா 232 ரன்களும், ஸ்டீவ் சுமித் 141 ரன்களும், அறிமுக வீரர் ஜோஷ் இங்லிஸ் 102 ரன்களும் அடித்தனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக சண்டிமால் 72 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் குனமன் 5 விக்கெட் , நாதன் லயன் 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 489 ரன்கள் பின்தங்கியதால் இலங்கை அணிக்கு ஆஸ்திரேலியா பாலோ ஆன் வழங்கியது.
இதனால் தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன் காரணமாக இலங்கை தனது 2வது இன்னிங்சில் 247 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஜெப்ரி வாண்டர்சே 53 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் குனமன், நாதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது.