
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த சூழலில் இன்று 2-வது நாள் ஆட்டம் ஆரம்பமானது.
இன்றைய நாளின் தொடக்க ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ராவின் முதல் பந்திலேயே பவுண்டரி அடுத்த ஜோ ரூட் தனது 37-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் இங்கிலாந்து அணி பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களிலும், ஜோ ரூட் 104 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
இதனால் தடுமாறிய இங்கிலாந்து அணியை விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் (37 ரன்கள்*) மற்றும் பிரைடன் கார்ஸ் (16 ரன்கள்*) கைகோர்த்து காப்பாற்றி வருகின்றனர்.
இதில் ஜேமி சுமித் 10 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை கடந்தார். இந்த 1,000 ரன்களை 1,303 பந்துகளில் ஜேமி சுமித் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 1,000 ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ஜேமி சுமித் - 1,303 பந்துகள்
2. சர்பராஸ் அகமது - 1,311 பந்துகள்
3. ஆடம் கில்கிறிஸ்ட் - 1,330 பந்துகள்
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் குயிண்டன் டி காக் உடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இருவரும் 21 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.