சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.
இந்த போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகியது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் கேட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியது தொடர்பாக ரோகித் சர்மா கூறியதாவது,
நான் பார்மில் இல்லை. ரன்கள் எடுக்கவில்லை. இது ஒரு முக்கியமான ஆட்டம்.நல்ல பார்மில் உள்ள வீரர் போட்டிக்கு தேவை. இதனால் தான் நான் போட்டியில் இருந்து விலகினேன் . பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் என்னுடைய முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். டெஸ்டில் இருந்து ஒய்வு பெறும் எண்ணம் இல்லை . என தெரிவித்தார் .