டெல்லியில் தீவிரமடையும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை: 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டும் ஆம் ஆத்மி

1 week ago 4

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குபதிவு நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு உற்று கவனிக்கப்படும் டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. டெல்லியின் பப்பார்க்கஞ்சி சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஆம் ஆத்மி கட்சி மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார்.

பப்பார்க்கஞ்சி தொகுதியின் முன்னாள் ஆம் ஆத்மி வேட்பாளரான மனிஷ் சிசோடியா தான் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து மதுபான கொள்கையில் ஊழல் செய்ய திட்டத்தை வடிவமைத்த சிற்பி என்றும் அவர் குற்றம்சாட்டினார். நாட்டில் இளைஞர்கள் வேலையில்லாமல் தள்ளாடும் போது கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஏற்பாடு செய்யப்படும் கேளிக்கை பார்ட்டிகளில் பிரதமர் மோடி உற்சாக நடனமாடுகிறார் என்றும் பாஜகவை சாடினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவர்க்கும் சரிசமமான வாய்ப்புகள் கிடைக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

டெல்லியின் காந்திநகர் தொகுதியில் பாஜகவின் மனுஜ் திவாரி அரவிந்த் சிங் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி வேட்பாளருமான சவுரத் பரத்வாஜ் யமுனை ஆற்றில் மாசு ஏற்படுவதற்கு அரியானா பாஜக அரசே காரணம் என்றும் குற்றசாட்டை முன்வைத்தார். தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காததால் சோனிபட், பானிபட் நகரங்களில் கழிவுகள் யமுனை ஆற்றில் கலப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் ஆம் ஆத்மி 27 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்கமுடியாமல் போராடும் பாஜக, 2013க்கு பிறகு அரியணை ஏறமுடியாத காங்கிரஸ் என 3 முக்கிய கட்சிகளும் தீயாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post டெல்லியில் தீவிரமடையும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை: 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டும் ஆம் ஆத்மி appeared first on Dinakaran.

Read Entire Article