
புதுடெல்லி,
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினும் இதில் பங்கேற்கிறார். இதையொட்டி, சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் நேற்று காலை 9.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லிக்கு பகல் 12.50 மணிக்கு வந்தடைந்த மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர், தமிழ்நாடு இல்லம் சென்ற முதல் அமைச்சர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 2026 -சட்டப்பேரவை தேர்தல், இந்தியா கூட்டணி குறித்து அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்ஷா) திட்ட நிதி, பேரிடர் நிதி உள்ளிட்ட நிலுவை நிதிகளை விடுவிக்குமாறு இந்த கூட்டத்தில் அவர் வலியுறுத்துகிறார். பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.