கர்ப்பம் கலைந்ததால் காதல் மனைவியை திட்டிய கணவர்; மனமுடைந்து இளம்பெண் தற்கொலை

3 hours ago 1

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் அம்ரீன் ஜஹான், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மொரதாபாத் பகுதியை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் பெங்களூருவில் வெல்டராக வேலை பார்த்து வரும் நிலையில், கணவரின் தந்தை ஷாகித் மற்றும் கணவரின் சகோதரி கதீஜா ஆகியோருடன் மொரதாபாத்தில் அம்ரீன் வசித்து வந்தார்.

இதனிடையே, அம்ரீன் ஜஹானுக்கு சமீபத்தில் எதிர்பாராத விதமாக கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், அம்ரீன் ஜஹான் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீடியோ ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், கர்ப்பம் கலைந்ததற்கு தனது தவறான உணவு பழக்கவழக்கங்கள்தான் காரணம் என கணவரின் சகோதரி கதீஜாவும், மாமனார் ஷாகித்தும் தன்னை குற்றம் சாட்டுவதாக அவர் கூறியுள்ளார். அவர்களோடு தனது கணவரும் சேர்ந்து கொண்டு தன்னை திட்டியதாகவும், 'நீ ஏன் சாகக்கூடாது?' என்று கேட்டதாகவும் அம்ரீன் ஜஹான் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தன் மீதுதான் அனைத்து தவறும் இருப்பதாக கணவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள் என்றும், தனது மருத்துவ சிகிச்சைக்காக பணம் செலவழித்து தவறு செய்துவிட்டதாக கூறுகிறார்கள் என்றும் அம்ரீன் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மரணத்திற்கு கணவரின் தந்தை மற்றும் சகோதரிதான் காரணம் என்றும், தனது கணவருக்கும் இதில் பாதி பங்கு உள்ளது என்றும் கூறிவிட்டு அம்ரீன் ஜஹான் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது தந்தை சலீமை தொடர்பு கொண்டு பேசிய அம்ரீன் ஜஹான், கணவரின் குடும்பத்தினரிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கூறி அழுத்துள்ளார். இதனால் சலீம் பதறிப்போய் தனது மகளை பார்ப்பதற்காக வந்துள்ளார். ஆனால் அதற்குள் அம்ரீன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சலீம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அம்ரீன் ஜஹானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக அம்ரீனின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article