
திருமாலின் 10 அவதாரங்களில் பக்தனை காப்பதற்காகவும், நாராயண மந்திரத்தின் மகிமையை உணர்த்துவதற்காகாவும், இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை உலகம் அறியச் செய்யவும் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம்.
பெருமாளின் உக்கிர வடிவமாக கருதப்படும் நரசிம்மர் வித்தியாசமான பல ரூபங்களில் பல கோவில்களில் காட்சி தருகிறார். அவ்வகையில், நரசிம்மர் மனித முகத்துடன் சைவ, வைணவ ஐக்கியமாக சிவலிங்கத்துடன் கருவறையில் ஒரே இடத்தில் காட்சி தரும் கதிர் (கத்ரி) நரசிங்கப் பெருமாள் கோவில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் உள்ளது.
சுயம்பு லிங்கம்
ஒரு காலத்தில் மன்னர் ஒருவர் சிவன், பெருமாள் இருவருக்கும் கோவில் கட்ட விரும்பினார். மன்னரின் கனவில் தோன்றிய சிவனும், பெருமாளும், தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தை குறிப்பிட்டு, கோவில் கட்டும்படி வழிகாட்டினர். மன்னரும் இந்த தலத்திற்கு வந்து கோவில் கட்டுவதற்கான பணிகளை துவங்கியபோது ஒரு இடத்தில் சுயம்பு லிங்கம் இருப்பதை கண்டார். அந்த லிங்கத்திற்கு அருகிலேயே நரசிம்மருக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தார்.
கோவில் அமைப்பு
கோவில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவில் முன்புள்ள மண்டபங்களின் தூண்கள் அனைத்துமே சைவ சமயத்தை குறிக்கும் வண்ணம் உள்ளன. அதே சமயத்தில் மண்டபங்களின் முன்புறத்தில் வைணவ சமயத்தை குறிக்கும் வண்ணம் சங்கும் சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ன. கோவிலின் நுழைவு வாசலில் பாண்டிய மன்னர்களின் அடையாளமான மீன் சின்னம் காணப்படுகிறது. கோவிலின் இடதுபுறம் அக்னி மூலையில் வீரமகா ஆஞ்சநேயர் ஆறடி உயரத்தில் ஒரே கல்லில் புடைப்பு சிற்பமாக தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இந்தியாவிலேயே அக்னி மூலையில் ஆஞ்சநேயர் இருப்பது இங்குதான். ஆஞ்சநேயரின் உடல் பகுதி கிழக்கு நோக்கியும், தலைப்பகுதி வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது. இவரை வேண்டினால் அபூர்வ சக்திகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோவிலின் வலதுபுறம் சிவனின் அம்சமான அனுகிரக பைரவர் இரண்டு நாய் வாகனத்தில் காட்சி தருகிறார். கருவறைக்குள் செல்வதற்கு முன்பு இருபுறமும் துவார பாலகர்கள் காட்சி தருகின்றனர். கதிர் நரசிங்கப் பெருமாள் கருவறைக்கு நேர் எதிராய் கருடாழ்வார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கின்றார்.
சிறப்பம்சம்
இக்கோவில் மகா மண்டபம், அர்ந்த மண்டபம், கருவறை கொண்ட அமைப்பாக உள்ளது. பத்ம விமானம் உள்ள கருவறையில் சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார். இடது கையை இடுப்பில் வைத்து காட்சியளிக்கிறார். நரசிங்க மூர்த்தி என்ற பெயர் பெற்றிருந்தாலும் நரசிம்ம முகம் இல்லாமல் சாந்த சொரூபராக காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே சுயம்பு சிவலிங்கம் காட்சி தருகிறது. பெருமாளும், சிவலிங்கமும் ஒரே மூலஸ்தானத்தில் காட்சி தருவது இக்கோவிலுக்கே உரிய சிறப்பாக உள்ளது.
மூலஸ்தானத்தில் மனித முகத்துடன் இருக்கும் நாசிம்மரை தரிசிப்பது சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஆனால் இங்குள்ள உற்சவர் நாசிம்ம முகத்துடன் காட்சி தருகிறார். இதுவே இக்கோவிலின் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது. முதலில் நரசிம்ம பெருமாளுக்கும் பின்பு சிவலிங்கத்திற்கும் அபிஷேகம் நடைபெறுகிறது.
அக்னி நட்சத்திர நாட்களில் சூரிய தோஷம் உள்ளவர்கள் கத்ரி நரசிங்கப் பெருமாளை வணங்கினால் தோஷம் நிவர்த்தியாவதோடு, அளவற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.
கருவறைக்கும் கோஷ்ட சுவருக்கும் இடையில் மூலஸ்தானத்தை மட்டும் சுற்றி வரும் வகையில் உள்பிரகாரம் ஒன்று உள்ளது. இது புராதன கோவில்களில் மட்டும் காணும் அமைப்பாகும். இங்குள்ள நுழைவு வாசலில் குனிந்தபடி உள்ளே சென்று நிமிர்ந்த படி வலம் வந்து மீண்டும் குனித்து கொண்டே வெளியேறும் வகையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுவாமிக்கு வலப்புறம் கமலவல்லி தாயார் அமர்ந்த கோலத்தில் தனிச் சன்னிதியில் அருள்புரிகிறார். அதற்கு அருகில் லட்சுமி ஹயக்ரீவர் சன்னிதி அமைந்துள்ளது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ஏலக்காய் மாலை அணிவித்து வழிபாடு செய்கிறார்கள்.
அதற்கு அடுத்து சதுர பலகை வடிவ கல்லில் சக்கரத்தாழ்வார் தனிச் சன்னிதியில் 16 கரங்களுடன் அக்னி ஜூவாலை கிரீடம் அணிந்து காட்சி தருகிறார். இவரை சுற்றி காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விசேஷமானவராக கருதப்படுகிறார்.
சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர், பாதத்திற்கு கீழே இருபுறமும் கருடாழ்வார், இரு கைகூப்பி வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆகியோர் காட்சியளிக்கிறார்கள்.
சக்கரத்தாழ்வாருக்கு பின்புறமாக இருக்கும் யோக நரசிம்மர் நான்கு திருக்கரங்களிலும் சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பாக, இவரது சன்னிதியில் அழைத்து வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். அதற்கு அடுத்து சரஸ்வதி தேவியை வணங்குகிறார்கள்.
இக்கோவிலின் பிரகாரத்தில் அழகிய நந்தவனம் அமைந்துள்ளது. கோவிலின் தலவிருட்சமாக வில்வ மரம் இருக்கிறது. ரெட்டியார் சத்திரத்தில் பிரசித்திபெற்ற கோபிநாத சுவாமி கோவிலின் உபகோவிலாக இக்கோவில் இருப்பதால் கிருஷ்ண ஜெயந்தி அன்று அங்கிருக்கும் கோபாலன், கதிர் நரசிங்கப் பெருமாள் கோவிலுக்கு வருகைபுரிந்து மூன்று நாட்கள் உறியடி உற்சவத்துடன் உற்சவம் காண்கிறார். கோவிலின் மதில் சுவர், கோட்டையின் மதில் சுவர் போலவே அமைந்துள்ளது.
பிரார்த்தனை
திருமணத் தடை ஏற்படுவோர், புத்திர தோஷம் சூரிய தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் வந்து எலுமிச்சை, துளசி மாலை அணிவித்து வணங்குகின்றனர். தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. தங்களது வேண்டுதல் நிறைவேற, 48 நாட்கள் நெய் தீபமேற்றி வழிபடுவது இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது.
திருவிழாக்கள்
நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, திருக்கார்த்திகை, புரட்டாசி சனிக்கிழமை, தேய்பிறை அஷ்டமி, வருடப்பிறப்பு, ஆடி பதினெட்டாம் நாள், கோகுலாஷ்டமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, சித்திரை திருநாள் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
திண்டுக்கல் -பழனி சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் பழனி தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டியார் சத்திரம் உள்ளது. இங்கு கொத்தப்பள்ளி என்ற கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.