டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்: 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை

2 weeks ago 5

டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலையில் சூறை காற்றுடன் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை 3 நாட்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்று காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

துவாரகா பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி, நொய்டா காசியாபாத் மற்றும் ஆர்.கே.நகர் துவாரகா உள்ளிட்ட தலைநகர் பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் ஆறு போல தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கனமழை காரணமாக அதிகாலையில் பள்ளி செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

டெல்லியில் மட்டுமின்றி உத்தரபிரதேசம், அரியானா போன்ற அண்டை மாநிலங்களிலும் கனமழை கொட்டியது. இந்நிலையில் தலைநகர் டெல்லிக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ள இந்திய வானிலை மையம் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என எச்சரித்துள்ளது. பொதுமக்கள் மரங்களுக்கு அருகே நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. நீர்நிலைகள் அருகே உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

 

The post டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்: 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article