கோவை, மே 23 : ஆண்டுதோறும் மே 22 ம் தேதி உலக பல்லுயிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று உலக பல்லுயிர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கோவை தலமை அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. ‘பறக்கப் பிறந்தது’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சிறப்பு அஞ்சல் உறை, பறவைகளின் சுதந்திரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் காணப்படக்கூடிய 12 வகையான கிளிகளும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பட்ட பறவைகள் பட்டியலில் இருப்பதால் கிளிகளை வீட்டில் வளர்ப்பதும், விற்பதும் குற்றமாக உள்ளது. கூண்டில் அடைத்து வைத்து கிளிகளை பார்த்து மகிழ்வதை விட, இயற்கையான சூழலில் அதன் வாழ்விடத்தில் பார்த்து மகிழ்வது அலாதியானது என்பதை வெளிக்காட்டும் வகையில் கிளி வானில் சுதந்திரமாக பறக்கும் படம் அஞ்சல் உறையில் இடம்பெற்றுள்ளது. இந்த சிறப்பு அஞ்சல் உறையை கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவசங்கர் வெளியிட, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோவை தலைமை அஞ்சல் அலுவலக முதுநிலை அஞ்சல் அதிகாரி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு appeared first on Dinakaran.