டெல்லிக்கு எதிராக மோசமான பேட்டிங்கால் தோல்வியடைந்த சென்னை

5 days ago 6

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ரச்சின் ரவீந்திரா 3 ரன்களிலும், கெய்க்வாட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கான்வே 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் சென்னை விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஷிவம் துபே 18 ரன்களிலும், ஜடேஜா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நடப்பு சீசனில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை இந்த ஆட்டத்திலும் அதனையே தொடர்ந்தது.

இதனையடுத்து விஜய் சங்கருடன் மகேந்திரசிங் தோனி கை கோர்த்தார். இருவரும் இணைந்து சென்னைக்கு வெற்றியை தேடி கொடுப்பர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இருவரும் பொறுமையாகவே பேட்டிங் செய்தனர். இதனால் ரன்ரேட் மந்தமாகவே நகர்ந்தது. இவர்களை அடித்து ஆட விடாமல் டெல்லி பவுலர்கள் நேர்த்தியாக பந்துவீசினர். விஜய் சங்கர் 43 பந்துகளில் அரைசதம் அடித்தார். மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்து கொள்வதிலேயே கவனம் செலுத்திய இருவரும் ரன் குவிக்கவில்லை.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் டெல்லி 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை தரப்பில் விஜய் சங்கர் 69 ரன்களுடனும் (54 பந்துகள்), மகேந்திரசிங் தோனி 30 ரன்களுடனும் (26 பந்துகள்) களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Read Entire Article