
புதுடெல்லி,
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு நேற்று வெளியானது. இதில் 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்தது. முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார். கடந்த 2 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில், டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் நிலையில் முதல்-மந்திரி தேர்வு செய்வது குறித்து பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லி முதல்-மந்திரியாக பர்வெஷ் வர்மா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா உள்ளிட்டோர் பெயர் பரிசீலனையில் உள்ளது. டெல்லியின் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா நாளை நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி முதல்-மந்திரி பதவியேற்பு விழாவிற்காக ராம் லீலா மைதானம் தயாராகி வருகிறது.