செல்போனை தாயார் பறித்ததால் நர்சிங் மாணவி தற்கொலை

5 hours ago 4

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருள்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் தேவச்சந்துரு. இவருடைய மனைவி வேணி அனிஷ் வான்மதி. இவர்களுக்கு ரஷிகா (வயது 18) என்ற மகளும், ராகுல் என்ற மகனும் இருந்தனர்.

தேவச்சந்துரு சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன்பின்பு வேணி அனிஷ் வான்மதி குழந்தைகளுடன் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் கம்பிபாலம் பகுதியில் வசித்து வருகிறார். ரஷிகா தடிக்காரன்கோணத்தில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இதனிடையே கடந்த 4 மாதங்களாக இளைஞர் ஒருவரை ரஷிகா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த தாயார் ரஷிகாவிடம் படிப்பு முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அத்துடன் மகளிடம் இருந்து செல்போனை பறித்து வைத்துக் கொண்டார். செல்போனை தாயார் பறித்ததால் ரஷிகா மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், குளிக்க செல்வதாக நேற்று காலை படுக்கை அறைக்கு சென்ற ரஷிகா வெகுநேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த வேணி வீட்டில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்துள்ளார். அங்கு மகள் ரஷிகா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேணி அலறிய நிலையில் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து ரஷிகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தனர். ரஷிகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. செல்போனை தாயார் பறித்ததால் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article