
சண்டிகர்,
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பின்புலமாக இருந்தது பாகிஸ்தானும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை ராணுவம், பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்ற அரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா உள்பட12 உளவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டு நாட்டை காட்டிக் கொடுத்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ஜோதி குறித்த விவரங்களை அரியானா உளவுப்பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்தனர். அப்போது யூடியூபர் ஜோதி, சந்தேகத்துக்கிடமான வகையில் பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது பின்னணி குறித்து உளவுப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.
அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிசுடன், ஜோதிக்கு உள்ள தொடர்பு தெரியவந்தது. இதையடுத்து கடந்த 16-ந் தேதி நியூ அகர்செய்ன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வைத்து ஜோதியை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது, இந்திய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சீனாவுக்கும் சென்று வந்தது தெரியவந்தது. இதேபோல் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநிலத்தில் மேலும் 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே மாலர்கோட்லா மாவட்டத்தில் இருந்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக பஞ்சாப் போலீசார் கைது செய்த குசாலா (31) என்ற பெண்ணும், டேனிசுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட குற்றச்சாட்டின்பேரில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியான டேனிசை, மத்திய அரசு நாடு கடத்தியது. கைதான 11 பேருக்கும் யூடியூபர் ஜோதியே தலைவிபோல் செயல்பட்டதாக கூறப்படுகிறது. நாட்டுக்கு எதிராக ஒரு கும்பலே உளவு பார்த்த தகவலும், அதில் 2 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்ட தகவலும் அறிந்து நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஜோதியிடம் என்.ஐ.ஏ., இந்தியாவின் உளவுப்பிரிவு அதிகாரிகள் மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தான் உளவு அமைப்புடன் ஜோதிக்கு உள்ள தொடர்பு, பணம் கைமாறிய விவகாரம், பாகிஸ்தானுக்கு கசியவிட்ட ரகசியங்கள், வேறு நாடுகளுக்கு இதுபோல் ரகசியங்கள் பகிரப்பட்டதா என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டதாக கூறப்படுகிறது.
ஜோதியின் மடிக்கணினியில் உள்ள விவரங்கள், போன், மெயில் தொடர்புகள் ஆகியவையும் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் அவர் எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் சென்றார், எந்த வரிசையில் சென்றார் என்பதை அறிய இந்த விசாரணை நடப்பதாக அந்த போலீஸ் அதிகாரி கூறினார். இதேபோல் கைது செய்யப்பட்ட சிலரிடமும் உளவுப்பிரிவு, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.