
புதுடெல்லி,
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அது ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 8-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.வை முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ரேகா குப்தா டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் 22 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அதிஷியை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். இதன் மூலம் டெல்லி சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையை அதிஷி பெற்றுள்ளார்.