
பாட்னா,
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் (பிப்.15) இரவு டெல்லி ரெயில்வே நிலையத்தில் அதிகளவில் பயணிகள் திரண்டிருந்தனர். இந்த சூழலில், அவர்கள் பயணிக்க வேண்டிய ரெயில் வேறொரு தண்டவாளத்தில் வந்தால் பயணிகள் முந்திக்கொண்டு ரெயிலில் ஏற முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கி பீகாரை சேர்ந்த இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "புதுடெல்லி ரெயில் நிலையத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் மக்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு வலியை தாங்கும் வலிமையை அளிக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இந்த சம்பவத்தில், பீகாரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.