
கோவை,
கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே வெள்ளியங்கிரி மலை இருக்கிறது. இங்குள்ள 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புலிங்கமாக காட்சி அளிக்கிறார்.
இந்த மலைக்கு செல்ல ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று 7-வது மலையில் உள்ள சுயம்பு லிங்க ஆண்டவரை தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலையில் உள்ள 7-வது மலையில் தமிழக வெற்றிக்கழக கொடி ஒரு கம்பில் ஏற்றப்பட்டு பறக்க விடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போளுவாம் பட்டி வனச்சரகர் சுரேந்தர் தலைமையில் வனத்துறையினர் 7-வது மலைக்கு சென்று த.வெ.க. கொடியை அகற்றினார்கள். ஆனால் அந்த கொடியை ஏற்றிய நபர்கள் யார்?. எதற்காக அங்கு கொடியேற்றினார்கள்? அவர்கள் குழுவாக வந்து இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளியங்கிரி மலையின் 7-வது மலையில் த.வெ.க. கொடியை ஏற்றியது யார்? என்பது தெரியவில்லை. பக்தர்கள் என்ற பெயரில் அந்த கட்சி நிர்வாகிகள் சென்று கொடி ஏற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. மலைக்கு செல்பவர்களை கண்காணிக்க மலையடிவாரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வனப்பகுதி ஆன்மிக மையமாக இருப்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு கட்சி கொடியை ஏற்றுவது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.