
துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாத் ஷகீல் 62 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக கொஞ்சமும் போராடாமலேயே பாகிஸ்தான் தோல்வியை சந்தித்ததாக இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளார். அணி வெற்றி பெறாவிட்டாலும் அபாரமாக போராடி ரசிகர்களின் இதயங்களை வெல்லும் செயல்பாடுகளை கூட பாகிஸ்தான் செய்யவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கண்டிப்பாக எனது இந்திய அணிக்காக நான் பெருமை பெறுகிறேன். ஆனால் இன்று நான் மகிழ்ச்சியான நபராக இல்லை. ஏனெனில் நீங்கள் போட்டி நிறைந்த ஆட்டத்தை காண விரும்புவீர்கள். ஆம் நாம் நம்முடைய நாட்டுக்காக விளையாடும் நமது அணி வெற்றிப் பெறுவதை விரும்புவோம். ஆனால் இப்போட்டி சென்ற விதத்தில் எனக்கு ஏமாற்றம். சொல்லப்போனால் அதில் போட்டியே இல்லை.
இந்த தொடரில் டாஸ் தவிர்த்து நீங்கள் எதை வென்றீர்கள்? இதயங்களை கூட வெல்லவில்லை. தோல்வியை சந்திப்பது சகஜம். ஆனால் அந்த தோல்விகளிலும் போராடினால் உங்களால் இதயங்களை வெல்ல முடியும். அதைக்கூட பாகிஸ்தான் இன்று செய்யவில்லை. இந்தியா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்தது.
முதலில் ரோகித்தை அப்ரிடி போல்டாக்கினார். 2வதாக கில்லை பந்து சுழன்று வந்து போல்டாக்கியது. ஸ்ரேயாஸ் ஐயரை அவுட்டாக்க சிறப்பான கேட்ச் தேவைப்பட்டது. பாண்ட்யாவுக்கு எதிராக மட்டுமே இந்தப் போட்டி முழுவதும் பவுன்சர் வீசப்பட்டது. இந்த 4 விக்கெட்டுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு நடந்த நல்ல விஷயமாகும். இப்படி சொல்வதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
அவர் கூறுவது போலவே நடப்பு சாம்பியன்ஸ் தொடரில் பாகிஸ்தான் விளையாடிய 2 போட்டிகளிலும் டாஸ் மட்டுமே வென்றுள்ளது. போட்டியில் வெற்றி பெறவில்லை.