டெல்டாவில் மழை நீடிப்பு; 22 ஆயிரம் மீனவர்கள் 3வது நாளாக முடக்கம்: நாகை, காரைக்காலில் புயல் கூண்டு ஏற்றம்

3 months ago 17


திருச்சி: டெல்டா மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. 22 ஆயிரம் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. நாகை, காரைக்காலில் முதலாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கிறது. மயிலாடுதுறையில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்தது. கும்பகோணம் மாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று காலை வரை மழை நீடித்தது. காரைக்காலில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மழை காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த செம்பரையில் இருந்து புள்ளம்பாடி செல்லும் சாலையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது.

தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் நேற்று அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் குறுவை பயிர்களை மழை நீர் சூழ்ந்தது. இன்று மழை இல்லாததால், வயலில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் 3வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் 2800 விசைபடகுகள், பைபர் மற்றும் நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 2,000, மயிலாடுதுறை மாவட்டத்தில் 5000 மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், முதல் கட்டுமாவடி வரை 27 மீனவ கிராமங்களில் 3000 மீனவர்கள், புதுக்ேகாட்டை மாவட்டத்தில் 2000 மீனவர்கள் இன்று முடங்கி உள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுகையில் 2 நாளில் ரூ.100 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து நெல்லூர்-புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையே வாரத்தில் 4 நாட்கள் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்கக்கடலில் கடல் சீற்றம், கனமழை, சூறை காற்று ஏற்படலாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாகை-இலங்கை இடையே இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நேற்று ரத்து செய்யப்பட்டது. இதேபோல் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் கூறினார்.

The post டெல்டாவில் மழை நீடிப்பு; 22 ஆயிரம் மீனவர்கள் 3வது நாளாக முடக்கம்: நாகை, காரைக்காலில் புயல் கூண்டு ஏற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article