சென்னை: டெல்டா மாவட்டங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய 20 எண்ணிகையிலான மொத்தம் 2,63,000 மெ.டன் கொள்ளளவில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு வளாகங்கள் ரூபாய் 399 கோடியே 19 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத் துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார். அதாவது;
1. பொது விநியோகத் திட்டம் தொடர்பான அரசு திட்டங்களைச் சிறப்பாக விரைந்து செயல்படுத்திட இத்துறையில் மின் அலுவலக செயலாக்கத்தினை (e-Office) 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்திட ஏதுவாக போதிய கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் மின் உருவாக்கக் கருவிகள், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் மூலமாக வழங்கப்படும். பொது விநியோகத் திட்டம் தொடர்பான அனைத்துச் சேவைகளும் மின் அலுவலகச் செயலாக்கம் (e-Office) வழியாகவே கையாளப்பட்டு வருகின்றன. இத்துறையின் இதர செயல்பாடுகள் மற்றும் தரவுகள் இணைய வழி வழியாகவே ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படுகிறது. எனவே, பொது விநியோகத் திட்டம் தொடர்பான அரசு திட்டங்களைச் சிறப்பாக விரைந்து செயல்படுத்திடவும், இத்துறையில் மின் அலுவலக செயலாக்கத்தினை (e-Office) 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்திட ஏதுவாக போதிய கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் மின் உருவாக்கக் கருவிகள், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் மூலமாக வழங்கப்படும்.
2. நுகர்வோர் தங்களது குறைகளை வலைதளத்தில் எளிதில் பதிவு செய்திட தனித்துவம் வாய்ந்த நுகர்வோர் குறைதீர் வலைதளம் மற்றும் கைபேசிச் செயலி (Consumer Grievance web portal and mobile app) உருவாக்கப்படும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இல் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி, நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்படும் சேவைக் குறைபாடுகள், நேர்மையற்ற வணிக நடவடிக்கைகள் மற்றும் தவறான விளம்பரத்தின் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படும் நேர்வுகளில், அவர்கள் இருப்பிடத்திலிருந்தோ அல்லது வணிகம் செய்யும் இடத்திலிருந்தோ துரிதமாகப் புகார் செய்திட ஏதுவாக நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் நுகர்வோர் குறைதீர் வலைதளம் மற்றும் கைபேசிச் செயலி (Consumer Grievance web portal and mobile app) உருவாக்கப்படும். இதற்கான செலவினம் தமிழ்நாடு நுகர்வோர் நலநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.
3. தமிழகம் முழுவதும் இளம் நுகர்வோரிடையே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும். இளம் நுகர்வோரிடையே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இன் சிறப்பம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னை மாநகரத்தில் செயல்படும் குடிமக்கள், நுகர்வோர் மன்றங்களின் மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் வாயிலாக ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சியும், இதர மாவட்டங்கள் அனைத்திலும் செயல்படும் குடிமக்கள், நுகர்வோர் மன்றங்களின் மாணவர்களுக்கு, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் வாயிலாக ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சியும் ரூபாய் 50 லட்சம் செலவில் வழங்கப்படும். இதற்கான செலவினம் தமிழ்நாடு நுகர்வோர் நலநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.
4. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 5 டெல்டா மாவட்டங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய 20 எண்ணிகையிலான மொத்தம் 2,63,000 மெ.டன் கொள்ளளவில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு வளாகங்கள் ரூபாய் 399 கோடியே 19 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். இந்தத் திட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, நபார்டு வங்கி மற்றும் இதர நிதி ஆதாரங்களைக் கொண்டு செயல்படுத்தப்படும்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகளை கிடங்கு, மேற்கூரை அமைப்புடன் கூடிய சேமிப்புக் கிடங்குகளிலும் மற்றும் இடையிருப்புக் கிடங்குகளிலும் இருப்பு வைக்கப்படுகின்றது. எனினும் அதிகபட்ச கொள்முதல் நடக்கும் நாட்களில் ஓரிரு தினங்கள் திறந்தவெளியிலும் வைக்கவேண்டிய நிலை ஒருசில இடங்களில் ஏற்படுகிறது. புயல், மழை போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் திறந்தவெளியில் இருப்பு வைக்கப்படும் நெல்மணிகள் ஈரப்பதத்தினால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள நமது முதலமைச்சர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் “ஒரு நெல்மணிகூட வீணாகக் கூடாது” என்று ஆணையிட்டுள்ளார்கள்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நடுவூர் கிராமத்தில் ரூபாய் 170 கோடியே 22 இலட்சம் மதிப்பில் ஒரு இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவிலும், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், ஆதனூர் மற்றும் கமுதக்குடி கிராமங்களில் முறையே 5,000 மற்றும் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், திருத்துறைப்பூண்டி வட்டம், கீழப்பாண்டி மற்றும் விளக்குடி கிராமங்களில் முறையே 3,000 மற்றும் 4,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், வலங்கைமான் வட்டம், திருவோணமங்கலம் கிராமத்தில் 12,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், நன்னிலம் வட்டம், முடிகொண்டான் கிராமத்தில் 18,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், முத்துப்பேட்டை வட்டம், கோவிலூர் கிராமத்தில் 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும் ஆக மொத்தம் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் மேற்கூறிய எட்டு இடங்களில் 56,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு வளாகங்கள் ரூபாய் 80 கோடியே 66 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
அது போல, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பரசலூர் கிராமத்தில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், மயிலாடுதுறை வட்டம், வில்லியநல்லூர் கிராமத்தில் 21,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், குத்தாலம் வட்டம், திருவாலங்காடு கிராமத்தில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவிலும் ஆக மொத்தம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கூறிய மூன்று இடங்களில் 31,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு வளாகங்கள் ரூபாய் 41 கோடியே 2 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். அது போல, நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டம், திருக்கண்ணபுரம் கிராமத்தில் 20,500 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், திருக்குவளை வட்டம், மணக்குடி கிராமத்தில் 17,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், கீழ்வேளுர் வட்டம், தேவூர் கிராமத்தில் 4,500 மெட்ரிக் டன் கொள்ளளவிலும் ஆக மொத்தம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கூறிய மூன்று இடங்களில் 42,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு வளாகங்கள் ரூபாய் 58 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
அது போல, கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், டி. புடையூர் கிராமத்தில் 9,500 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், ஶ்ரீமுஷ்ணம் வட்டம், தேத்தாம்பட்டு மற்றும் மேலப்பாலையூர் கிராமங்களில் முறையே 5,000 மற்றும் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், காட்டுமன்னார்கோவில் வட்டம், வானமாதேவி கிராமத்தில் 6,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், திட்டக்குடி வட்டம், தாழநல்லூர் கிராமத்தில் 11,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும் ஆக மொத்தம் கடலூர் மாவட்டத்தில் மேற்கூறிய ஐந்து இடங்களில் 33,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு வளாகங்கள் ரூபாய் 48 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். ஆக மொத்தம் மேற்கூறிய 5 டெல்டா மாவட்டங்களிலும் 20 இடங்களில் 2,63,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் ரூபாய் 399 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். இந்தத் திட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, நபார்டு வங்கி மற்றும் இதர நிதி ஆதாரங்களுடன் செயல்படுத்தப்படும்.
5. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 6 எண்ணிகையிலான மொத்தம் 49,000 மெ.டன் கொள்ளளவில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு வளாகங்கள் ரூபாய் 69 கோடியே 82 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். இந்தத் திட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, நபார்டு வங்கி மற்றும் இதர நிதி ஆதாரங்களைக் கொண்டு செயல்படுத்தப்படும். விவசாயிகளின் கடின உழைப்பில் விளைவிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகளை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கும் பொருட்டும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், வெங்கச்சேரி கிராமத்தில் 12,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும்,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், செங்கம் மற்றும் வெம்பாக்கம் வட்டம், வெம்பாக்கம் கிராமங்களில் முறையே 12,000 மற்றும் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலை கிராமம் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் கிராமம் ஆகிய இடங்களில் முறையே 5,000 மற்றும் 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கீரப்பாக்கம் கிராமத்தில் 15,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலும் ஆக மொத்தம் மேற்கூறிய 4 மாவட்டங்களில் 6 இடங்களில் 49,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் ரூபாய் 69 கோடியே 82 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். இந்தத் திட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, நபார்டு வங்கி மற்றும் இதர நிதி ஆதாரங்களுடன் செயல்படுத்தப்படும்.
6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தரக் கட்டிடங்கள் தலா ரூபாய் 30 இலட்சம் வீதம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெல்டா மற்றும் பிறமாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பொருட்டு 3000-க்கும் அதிகமான நெல்கொள்முதல் நிலையங்களை நடத்திவருகின்றது. இதில் 731 நிலையங்கள் மட்டுமே சொந்தக் கட்டிடங்களில் இயங்கிவருகின்றது. ஏனைய நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி, கீற்றுக்கொட்டகை, தனியார் வாடகைக் கட்டிடங்கள், அரசுக் கட்டிடங்கள் மற்றும் கோவில் நிலங்கள் ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தரக் கட்டிடங்களை படிப்படியாக அரசு கட்டி வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தரக் கட்டிடங்கள் தலா ரூபாய் 30 இலட்சம் வீதம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கட்டப்படும்.
7. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான 12 நவீன அரிசி ஆலைகளில் தலா ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ரூபாய் 7 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். இந்தத் திட்டம் நபார்டு வங்கி மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 15 நவீன புழுங்கல் அரவை அரிசி ஆலைகளும், 6 நவீன பச்சரிசி அரவை ஆலைகளும் ஆக மொத்தம் 21 நவீன அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 15 புழுங்கல் அரிசி ஆலைகளில் 12 ஆலைகளில் தற்போதுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் சுமார் 25 வருடம் முதல் 35 வருடங்கள் வரை ஆகிவிட்டதால் புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் ரூபாய் 7 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மாநில அரசு மற்றும் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் கட்டப்படும்.
8. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான 12 நவீன அரிசி ஆலைகளில் 500 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றிகள் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். இந்தத் திட்டம் நபார்டு வங்கி மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் சேர்த்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 21 நவீன அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 12 நவீன அரிசி ஆலைகளில் 200 கிலோவாட், 250 கிலோவாட் மற்றும் 315 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிலிருந்து வருகிறது. இந்த ஆலைகள் அனைத்தும் மூன்று கட்டங்களாக நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 20 ஆலைகள் இயக்கத்தில் உள்ளன. அவற்றில் தற்போது கலர் சார்டெக்ஸ் இயந்திரம் மற்றும் FRK கலவை இயந்திரம் உள்ளிட்ட அதிநவீன மின் உபகரணங்கள் நிறுவப்பட்டு உள்ளது. இயக்கத்தில் உள்ள 20 நவீனமயமாக்கப்பட்ட ஆலைகளில் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் அதிக திறன் கொண்ட 500 கிலோவாட் கிலோவாட் மின்மாற்றிகள் மாநில அரசு மற்றும் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் நிறுவப்படும்.
9. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பதவி உயர்வு பெறும் இளநிலை உதவியாளர்களுக்கு பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ஆண்டுதோறும் 70 முதல் 100 பணியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும். இதற்கென வாணிபக் கழகத்தின் பயிற்சி நிதியிலிருந்து ரூபாய் 3 இலட்சம் செலவினம் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஆண்டுதோறும் பதவி உயர்வில் வரும் இளநிலை உதவியாளர்களுக்கு தற்போது எந்தவிதமான அடிப்படைப் பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை. இவர்களது பணித்திறனை மேம்படுத்தும் வகையில் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ஆண்டு தோறும் தலா 70 முதல் 100 பணியாளர்களுக்கு அலுவல் நடைமுறை, கணக்கு, கணினி, பணி நடைமுறை ஆகிய பிரிவுகளில் ஆண்டுதோறும் ரூபாய் 3 இலட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்படும். இதற்கென வாணிபக் கழகத்தின் பயிற்சி நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ளப்படும்.
10. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பதவி உயர்வின் மூலம் நியமிக்கப்படும் இளநிலை தர ஆய்வாளர்களுக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் ஆண்டுதோறும் 50 பணியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும். இதற்கென வாணிபக் கழகத்தின் பயிற்சி நிதியிலிருந்து ரூபாய் 8 இலட்சம் செலவினம் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஆண்டுதோறும் பதவி உயர்வின் மூலம் நியமிக்கப்படும் இளநிலை தர ஆய்வாளர்களுக்கு தற்போது தொழில்நுட்பப் பயிற்சி மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எந்தவிதமான அடிப்படைப் பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை. இவர்களது பணித்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் ஆண்டு தோறும் தலா 50 பணியாளர்களுக்கு அலுவல் நடைமுறை, கணக்கு, கணினி, பணி நடைமுறை ஆகிய பிரிவுகளில் ஆண்டுதோறும் ரூபாய் 8 இலட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்படும். இதற்கென வாணிபக் கழகத்தின் பயிற்சி நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ளப்படும்.
11. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுமானப் பிரிவில் பணியமர்த்தப்படும் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள், உதவி வரைவாளர்கள் ஆகியோருக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும். இதற்கென வாணிபக் கழகத்தின் பயிற்சி நிதியிலிருந்து ரூபாய் 5 இலட்சம் செலவினம் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுமானப்பிரிவில் பணியமர்த்தப்படும உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள், உதவி வரைவாளர்கள் ஆகியோர்களுக்கு தற்போது எந்தவிதமான அடிப்படைப் பயிற்சியோ அல்லது தொழில்நுட்ப பயிற்சியோ அளிக்கப்படுவதில்லை. இவர்களது பணித்திறனை மேம்படுத்தும் வகையில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் அலுவல் நடைமுறை, கணக்கு, கணினி, பணி நடைமுறை மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் ரூபாய் 5 இலட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்படும். இதற்கென வாணிபக் கழகத்தின் பயிற்சி நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ளப்படும்.
12. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படும் பல்வேறு நிலைப் பணியாளர்களுக்கு 1989-இல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகள் மறு ஆய்வு செய்து திருத்தியமைக்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படும் பல்வேறு நிலைப் பணியாளர்களுக்கு 1989-இல் இறுதியாக கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. அதன் பிறகு கடந்த 36 வருடங்களாக இந்த கல்வித் தகுதிகள் பெரிய அளவில் மறு ஆய்வு செய்யப்படவில்லை. தற்போதுள்ள தொழில்நுட்பக் கல்வி மற்றும் இதர துறைகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு இவர்களுக்கான கல்வித்தகுதிகளை தற்போது மறுவரையறை செய்வது அவசியம் ஆகிறது. எனவே, இதற்கென கல்வி வல்லுநர்களை கொண்ட ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கல்வித் தகுதிகள் திருத்தியமைக்கப்படும்.
13. பரீட்சார்த்த முறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சென்னையில் உள்ள மாதவரம் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் அதிநவீன கருவிகள் மற்றும் இயந்திரங்களை ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் நிறுவி அதன் செயல்திறன் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமாக 321 நெல் சேமிப்பு மற்றும் பொது விநியோகத்திட்டக் கிடங்குகள் உள்ளன. இந்த கிடங்குகளில் எந்த விதமான நவீன சுமைதூக்கும் உபகரணங்களோ அல்லது கையாளும் கருவிகளோ இல்லை. எனவே, பரீட்சார்த்த முறையில் சென்னையில் உள்ள மாதவரம் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் இரண்டடுக்கு சேமிப்பு வசதிகள், Fork lift, Trolley போன்ற நவீன உபகரணங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு கிடங்கின் செயல்திறனையும், கையாளும் திறனையும் மேம்படுத்த ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
14. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள 120 ஆண்டுகள் பழமையான தலைமை அலுவலகக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், பராமரிப்புப் பணிகள் மற்றும் நவீன அலுவலக அமைப்புகளை (Modular Work Station) உருவாக்கவும் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள 120 ஆண்டுகள் பழமையான தலைமை அலுவலகக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பெருமழை மற்றும் இயற்கைப் பேரிடர் காலங்களில் மழைநீர் சுமார் 4 அடி உயரத்திற்கு மேலாக தேங்கி நிற்பதால் அலுவலகப் பணிகள் மற்றும் கோப்புகள் ஆகியவை பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்தக் கட்டிடத்தில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், பராமரிப்புப் பணிகள் மற்றும் நவீன அலுவலக அமைப்புகளை (Modular Work Station) உருவாக்கவும் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
15. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவல் பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், கொள்முதல் மற்றும் பொது விநியோகத்திட்டப் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திட மின் அலுவலக செயலாக்கம் (e-Office) 100 சதவீதம் அமல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு மின் ஆளுமை மூலமும், மின் அலுவலக செயலாக்கத்தின் மூலமும் அரசு அலுவலர்களின் பணிகளை செவ்வனே விரைந்து முடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது போலவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவல் பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், கொள்முதல் மற்றும் பொது விநியோகத்திட்டப் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திட மின் அலுவலக செயலாக்கம் (e-Office) 100 சதவீதம் அமல்படுத்தப்படும்.
16. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் நெல் உலர்த்தும் இயந்திரம், நெல் சுத்திகரிக்கும் இயந்திரம், நெல் சேமிப்புக்கலன், தானியங்கி முறையில் செயல்படும் இழுவை, எடை பிடிக்கும் மற்றும் தையலிடும் இயந்திரங்கள் உள்ளிட்ட அதி நவீன வசதிகளுடன் கூடிய அதிகத்திறன் கொண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (Mega DPCs) நான்கு டெல்டா மாவட்டங்களில் தலா ரூபாய் 2 கோடி வீதம் 5 நிலையங்கள் மொத்தம் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மாநில அரசு மற்றும் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் நிறுவப்படும். பரீட்சார்த்த முறையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பஞ்சநதிக்கோட்டை கிராமத்தில் மாநில அரசின் நிதி உதவியுடன் கடந்த 29.03.2025 அன்று திறந்து வைக்கப்பட்ட அதிகத்திறன் கொண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் சிறப்பாகச் செயல்பட்டு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இந்த அதி நவீனக் கொள்முதல் நிலையத்தில் நெல் உலர்த்தும் இயந்திரம், நெல் சுத்திகரிக்கும் இயந்திரம், நெல் சேமிப்புக்கலன், தானியங்கி முறையில் இயங்கும் இழுவை, எடை பிடிக்கும் மற்றும் தையலிடும் இயந்திரங்கள் உள்ளிட்ட அதி நவீன வசதிகள் உள்ளதால், இதன் கொள்முதல் செய்யும் திறன் மற்றும் நெல்லினைக் கையாளும் திறன் வழக்கமாகச் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விட எட்டு முதல் பத்து மடங்கு வரை அதிகம் என்பதால், காத்திருப்பு நேரம் குறைந்து, விரைவாக கொள்முதல் பணிகள் நிறைவடைவதால், விவசாயிகள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், அரசிற்கும் செலவினம் குறைகிறது. மேலும், தரமான நெல், சரியான எடை ஆகியவை உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் கொள்முதல் நிலையங்களில் இருந்து தூசு பறப்பது கட்டுப்படுத்தப்பட்டு, நெல் மணிகள் சிந்தாமலும், சிதறாமலும் கொள்முதல் செய்யப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது.
எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இத்தகைய அதி நவீன மற்றும் அதிகத்திறன் கொண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்றும் ஆக மொத்தம் ஐந்து இடங்களில் தலா ரூபாய் 2 கோடி வீதம் மொத்தம் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மாநில அரசு மற்றும் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் நிறுவப்படும்.
17. தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பழமையான 6 சேமிப்பு வளாகங்களில் உள்ள 30 கிடங்கு கட்டிடங்கள் ரூபாய் 17 கோடியே 49 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். 1958-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வரும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில், மொத்தம் உள்ள 272 சேமிப்பு கிடங்கு கட்டிடங்களில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட போளூர், மேட்டுப்பாளையம், விழுப்புரம், நாமக்கல், தூத்துக்குடி நகரம் மற்றும் கரூர் ஆகிய 6 பழமையான சேமிப்பு வளாகங்களில் உள்ள 75,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 30 கிடங்கு கட்டடங்களின் மேற்கூரைகள், சுற்றுசுவர்கள், மின்சாரம், சாலைகள், சேமிப்பு கிடங்கு அலுவலக கட்டிடங்கள், வடிகால், சுமை தூக்குபவர் தங்கும் வசதிகள் போன்ற பணிகள் மொத்தம் ரூபாய் 17 கோடியே 49 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன சொந்த நிதியின் கீழ் புனரமைக்கப்படும்.
18. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்கு ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் விளையும் நெல், வேர்க்கடலை, மக்காச்சோளம் மற்றும் கொப்பரைத் தேங்காய் ஆகிய விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கு போதிய சேமிப்பு கிடங்கு வசதி இல்லாத காரணத்தினால், புதிய சேமிப்பு கிடங்கு அமைத்திட கோரிய விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம், கேதையுறம்பு கிராமத்தில் அலுவலகம் மற்றும் எடைமேடையுடன் கூடிய 3400 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு, ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சொந்த நிதியிலிருந்து கட்டப்படும்.
The post டெல்டா மாவட்டங்களில் நவீன நெல்சேமிப்பு வளாகங்கள் கட்டப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.