ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஸ்ரீமஞ்சனீஸ்வரர்

1 day ago 4

மஞ்சனீஸ்வரரின் நண்பர்

விழுப்புரம் மாவட்டம் கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்குள் ஸ்ரீ மஞ்சனீஸ்வரர் என்ற ஈஸ்வர பட்டத்துடன் பூரணி புஷ்கலா சமேத அய்யனாராக அருள் பாலிக்கிறார். ஐவேலங்காடு என்று அழைக்கப்படும் பச்சை மூலிகைகள் நிறைந்த காட்டின் நடுவில், ராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. மரங்கள் நிறைந்த நடுக்காட்டுக்குள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாயில் முன்புறம் பலிபீடமும், யானை வாகனமும் உள்ளது. கோயிலுக்குள் சுப்ரமணியர் சந்நதியும், தெற்கே விக்னேஸ்வரர் சந்நதி என தனித் தனி கோயில்களாக உள்ளன. கோயிலின் பின்புறம் மேற்கில் குதிரைக்கோயில், புத்துக் கோயில், நாகாத்தம்மன் கோயில், விநாயகர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. கோயிலுக்கு முன்புறம், நுழைவதற்கு முன்பாக மஞ்சனீஸ்வரரின் நண்பரும் காவலருமான மலையாளத்தார் சந்நதி அமைந்துள்ளது. திண்டிவனம், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் திந்திணீஸ்வரம் என்று அழைக்கப்பட்டதாம். அவருடைய காலத்தில்தான் இங்கே அய்யனாரப்பனுக்கு முதன்முதலில் கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மூலஸ்தானம், அர்த்த மண்டபம், அலங்கார மண்டபம், மகா மண்டபம், பிராகாரம் என்று அனைத்து அம்சங்களையும் கொண்ட கோயிலாக இந்த ஸ்ரீமஞ்சனீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலை முதலாம் குலோத்துங்கன் கட்டினாராம். நடுநாட்டில் தோன்றிய முதல் கோயில் இது என்றும் சொல்லப்படுகிறது. 1995ம் ஆண்டில் இந்த கோயிலில் மண்டபம் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு 2001ம் ஆண்டு, 5 நிலை ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது கடந்த ஆண்டு கும்பாபி ஷேகம் நடந்தது.

வரம் கேட்ட பத்மாசுரன்

கோயில் தோன்றியது குறித்து அர்ச்சகர் கிருபாநிதி குருக்கள் கூறியதாவது; “நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட வேண்டும் என்ற வரம் வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும்’’ என பத்மாசுரன் எனும் அரக்கன் நாரதரிடம் கேட்டான். அவர் ஈஸ்வரனை வேண்டி தவம் செய்யச் சொன்னார். அதனால் பத்மாசுரன் புத்துப்பட்டில் உள்ள ஐவேலங்காட்டில் கடும் தவம் இருந்தான். சிவபெருமானை நோக்கி தவம் இருந்ததால், அவனது தவத்தை மெச்சிய இறைவன் “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’’ எனக் கேட்க, அதற்கு பத்மாசூரன் நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் எரிந்து போக வேண்டும் என்று கேட்க, ஈஸ்வரனாகிய சிவபெருமான் எந்த வரம் கேட்டாலும் கொடுத்துவிடுவார் என்பதால் வரத்தை கொடுத்துவிட்டார். உடனே அந்த வரத்தை சோதித்து பார்க்க முயன்றபோது, அது காடு என்பதால் யாருமில்லை, எனவே எதிரே நின்ற சிவபெருமானின் தலையிலேயே பத்மாசுரன் கை வைக்க ( இதுதான் வரம் கொடுத்தவன் தலையிலேயே கைவைத்த கதையாக என்ற பழமொழியாக மாறியது) சுதாரித்துக் கொண்ட இறைவன், அங்கிருந்து ஓடிச் சென்று ஐவேல மரத்தின் காயாக மாறிவிடுகிறார்.

மோகினி வடிவில் விஷ்ணு

உடனே பத்மாசூரன், அதனை சாப்பிடுவதற்காக ஆடாக மாறினான். உடனே சிவபெருமான், தனது மைத்துனரான விஷ்ணுவை உதவிக்கு அழைக்கிறார். அவர் மோகினி அவதாரம் எடுத்து அங்கு வருகிறார். இதைப் பார்த்த பத்மாசூரன், சிவபெருமானை மறந்து மோகினியின் அழகில் மயங்கி, நான் உன்னுடன் சேர வேண்டும் என்கிறான். உடனே மோகினிவடிவில் இருந்த விஷ்ணு, “உன் உடம்பெல்லாம் புற்று மண்ணாக இருக்கிறது. நீ குளித்து விட்டு வா’’ என்று அவனை அனுப்பி விடுகிறார். இதனால், பத்மாசூரன் காட்டைஒட்டி உள்ள கழுவெளி பகுதிக்கு சென்றான். எப்போதும் தண்ணீர் நிரம்பி காணப்படும் அங்கு விஷ்ணுவின் கைங்கர்யத்தால் தண்ணீர் வற்றி காணப்பட்டது. ஆனால், ஒரு மாடு நடந்து சென்ற கால்தடத்தின் குழியில் சிறிதளவு தண்ணீர் இருந்தது. அந்த தண்ணீரை கையால் தொட்டு பத்மாசுரன் தலையில் வைத்தபோது, அவன் பெற்ற வரத்தால் அவனே எரிந்து சாம்பலானான்.

எப்படி உருவானார் அய்யனாரப்பன்?

பின்னர் சிவபெருமான் மரத்தில் இருந்து இறங்கி வந்தபோது, மோகினியின் அழகில் மயங்கி, அவர் மீது ஆசைப் படுகிறார். இதற்கும் ஒரு கதை இருக்கிறது. கேரளத்தில் மகிஷி என்ற அரக்கி ஒரு வரம் வாங்கியிருக்கிறாள், ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்தவன் கையால்தான் எனக்கு சாவு என்று. அதனால், மோகினியுடன் – சுவாமி இணைகிறார். அதாவது இங்கே நாம் இதனை எப்படி புரிந்துகொள்ள வேண்டுமெனில், நமக்கு ஸ்தூல தேகம். பத்து மாதம் ஆகும் குழந்தை பிறக்க… ஆனால், கடவுள்கள் சூட்சும தேகம்.நினைத்த மாத்திரத்தில் குழந்தை பிறக்கும். இவ்வாறு சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் அய்யனாரப்பன். இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமென்றால், இரண்டு உயர்நிலை சக்திகள் இணையும் போது உண்டாகும் புதிய சக்தி, இது நம் சாமானிய வாழ்வில் நடைபெறக்கூடிய குழந்தை பிறப்புபோல் அல்ல. மிகவும் சூட்சுமமாக புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.சிவன் என்கின்ற சக்தி, ஒடுக்கும் தன்மையுடையது. விஷ்ணு என்கின்ற சக்தி, பரிபாலிக்கும் தன்மைகொண்டது. அந்த விஷ்ணுவின் தொப்புளில் இருந்து பிறந்த பிரம்மா, படைக்கும் செயலை செய்கிறார். இப்போது, படைக்கப்பட்ட உலகத்தின் மீது, விஷ்ணு சக்தியும் – சிவ சக்தியும் கலந்த அய்யனாரப்பன் என்னும் புதிய அவதாரமே இது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். இந்த புத்துமண் காட்டில் பிறந்ததால் அவருக்கு பெயர் புத்துப்பட்டு அய்யனாரப்பன். கேரளத்தின் பந்தள மகாராஜாவுக்கு குழந்தை இல்லாததால், தேவர்களுக்கெல்லாம் குருவான பிரகஸ்பதி இந்த அய்யானாரப்பனை மன்னனிடம் கொடுத்து வளர்க்கிறார். அவர்தான் மணிகண்டன். மகிஷியின் வரத்தின்படி 12 வயது வரை மட்டுமே அதாவது பாலபருவம் வரையில்தான் அய்யப்பன் அங்கிருந்தார். மகிஷியை வதம் செய்த பின்னர் வாலிப பருவம் வந்ததால் மீண்டும் புத்துப்பட்டுக்கே வந்துவிடுகிறார்.

காவல் தெய்வமாக அய்யனார் உருவானது எப்படி?

இலவஞ்சி நாட்டு அரசன் மகள் பூரணையையும், நேபாள தேசத்து அரசன் பிகரஞ்சன் மகள் புஷ்கலாம்பிகையையும் அய்யனாரப்பன் மணந்தார். திருமணத்தில் கலந்துகொண்ட திருமால், காக்கும் தெய்வமாக இங்கிருந்து உலகைக் காவல் காத்துவரப் பணித்தார். தலையில் தெளித்துக்கொள்ளும் புனித நீர் மஞ்சனநீர் எனப்படும். பத்மாசுரன் தலையில் தெளித்துக்கொண்ட நீரால் தீயது அழிந்து, உலகைக் காக்கும் காவல் தெய்வமாக அய்யனார் உருவானதால், மஞ்சனீஸ்வரர் என அழைக்கப்பட்டார். காட்டில் புற்றுகள் நிறைந்த கீழ்புத்துப்பட்டு என்னும் அந்த வனத்திலேயே கோயில் கொண்டார். உலகைக் காவல் காக்கும் பணி இருப்பதால், கோயிலில் சூரிய அஸ்தமனம் வரை இருந்து மக்களுக்கு அருள் செய்து பிறகு வானுலகம் சென்று தேவர்கள் முனிவர்கள் போன்றோர் அளிக்கும் பூஜையை ஏற்று நள்ளிரவில் தன் வெள்ளைக் குதிரையில் ஏறி, பரிவாரங்களும் உதவியாளர் மலையாளத்தார் உடன் வர, மஞ்சு எனப்படும் மேகத்துக்குள் புகுந்து உலகம் முழுவதும் காவல் காத்துவருகிறார். அப்போது மேகங்கள் இவருடன் துணையாக அணிவகுத்துச் செல்லும். மஞ்சை அணியாகச் சூடியதால் மஞ்சனீஸ்வரர் எனவும் அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஈஸ்வரப் பட்டம் பெற்ற அய்யனாரப்பன்

இங்குள்ள அய்யனாரப்பனுக்கு என்ன சிறப்பு என்றால், ஈஸ்வரப் பட்டம் பெற்றவர். அந்த அய்யனாரப்பன் மட்டுமே. அதுதான் மஞ்சனீஸ்வரர். அதற்கும் ஒரு காரணம் உண்டு. பெருமாளுக்கு அபிஷேகம் செய்யும் புனிதநீரை மஞ்சனநீர் என்பார்கள். மாட்டின் கால்தடத்தில் பெருமாள் உருவாக்கிய நீரில் உண்டானவர் என்பதால் அய்யனாரப்பனுக்கு மஞ்சனீஸ்வரன் என்ற பெயர் வந்தது.

திருவிழாக்கள்

இந்த கோயிலில் சித்திரை, வைகாசி மாதத்தில் குழந்தைகளுக்கு காதுகுத்தும் நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். அடுத்து ஆடிமாதத்தின் ஐந்து திங்கட்கிழமைகளிலும் பிரமாண்டமான திருவிழா நடக்கும். ஏராளமான பக்தர்கள் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து, குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தி வழிபடுவார்கள். குடும்பம் விருத்தியாக வேண்டும், நோய் நொடியின்றி வாழ வேண்டும் என வேண்டி, சுவாமியை வழிபடுவார்கள். நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். தை மாதம் திருமணப் பத்திரிகை வைப்பதற்கு வருவார்கள். மாசிமாதம் கடற்கரைக்கு தீர்த்தவாரி செல்வார். மிகவும் சிறப்பாக இருக்கும். இங்குள்ள புற்றில் அய்யனாரப்பன் பிறந்ததால் குழந்தைவரம் வேண்டி இங்கு தொட்டில் கட்டி செல்வார்கள். அவர்கள் வேண்டியபடியே குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் முதல் மகர தீபம் வரை சிறப்பான நாட்களாக ஐயப்ப பக்தர்களால் வழிபடப்படுகிறது. சபரிமலை செல்வதன் முன்போ, சென்றுவிட்டு வந்த பின்போ இந்தக் கோயிலுக்கு வருவதைப் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

சீட்டுகட்டினால் தோஷம் நீங்கும்

இது தவிர, இந்த கோயிலில் 4 குதிரைகள் உண்டு. இதில் அய்யனாரப்பனின் குதிரையான வேதக்குதிரையில் சீட்டு கட்டும் வழக்கம் உண்டு. பில்லி, சூனியம், ஏவல், திருட்டு, பணம் தராமல் ஏமாற்றுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து சீட்டு கட்டினால் உடனடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இங்கு வந்து சீட்டு எழுதி கட்டினால், அந்தப்பழக்கம் மறந்து போகும், நல்ல உடல்நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இது ஒரு சமூக புரட்சியாக இப்பகுதி மக்கள் குடியில் இருந்து விடுபட்டு திருந்தி வாழ வழிகாட்டுகிறார். அய்யனார் என்றாலே காவல்தெய்வம், அவரது வாகனமான குதிரைக்காலில் சீட்டு கட்டினால் நம்குறைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பதால் சீட்டு கட்டும் வழக்கம் உள்ளது. மேலும், இங்குள்ள புற்றில் மாங்கல்ய கயிற்றைக் கட்டினால் திருமண யோகம் கிடைக்கும். இது தவிர கல்வி யோகம், தொழில் யோகம் என அனைத்து யோகங்களும் கிடைக்கும். புதனுக்கு அதிபதி சாஸ்தா என்பதால் புதன்கிழமைதோறும் வந்து விளக்கேற்றி வழிபட்டால் வியாபாரம் பெருகும் என்பதும் ஐதீகம். இப்பகுதி ஐவேலங்காடு என்று அழைக்கப்படுகிறது. இதன் பரப்பளவு 36 ஏக்கர். இங்கு 106 வகை மூலிகைச் செடிகள் உள்ளன.

லட்சுமண சித்தர் ஜீவசமாதி

19ஆம் நூற்றாண்டில் புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்த லட்சுமண சித்தர் என்பவர், ராணுவத் தளவாட வண்டியின் சக்கரம் ஏறியதில் கால்கள் உடைந்ததால் கோயில் அருகே கடும் தவம் மேற்கொண்டார். அவர் மீது புற்று வளர்ந்து அவரது உடலை அரித்துவிட்டது. ஆனால் இன்றும் உயிர் உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இதேபோல் கேரளாவில் இருந்து சுவாமி வந்தபோது, அங்குள்ள காட்டுப் பகுதியில் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மலையாளத்தார் என்பவரை அழைத்து வந்தார். அவர் அய்யனாரப்பனுக்கு காவலாக கிழக்குத் திசையில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்தக் கோயில் உள்ளது.

செல்வது எப்படி:

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் இ.சி.ஆர் சாலையில், சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டு என்னும் ஊரில் மஞ்சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: 99947 07957

The post ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஸ்ரீமஞ்சனீஸ்வரர் appeared first on Dinakaran.

Read Entire Article