வரத்தை அளித்து உடனே நிறைவேற்றும் வரதாஞ்சநேயர்

1 day ago 4

கர்நாடகாவில் மட்டும் சுமார் 147 அனுமன்கள் வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அனுமன்களும் ஒவ்வொரு மகிமைகளை கொண்டு பக்தர்களை காத்துவருகிறார்கள். இந்த 147 அனுமன்களையும் நமது வாசகர்களுக்காக பிரத்தேகமாக பிரசுரிக்க வேண்டும் என்கின்ற ஆவல் தோன்றுகிறது. வாயுபகவானின் அருளால் பயணிப்போம்! தற்போது இந்த தொகுப்பில், கர்நாடக மாநிலம் பெங்களூர் மாகாணத்தில் அருளி வரும் “ஸ்ரீ வரதாஞ்சநேயர்’’ பற்றி காணலாம்.

மகானின்பிருந்தாவனம் போல்…

பெங்களூர், மெஜஸ்டிக் கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் இருந்து சங்கராபுரம், பசவனகுடி, யெலச்சேனஹள்ளி ஆகிய இடங்களை கடந்து சுமார் 12 கி.மீ தொலைவில், ஜே.பி.நகர் 7வது பிளாசா, ஆர்.பி.ஐ லேஅவுட்டின் நடுவில் அமைந்துள்ளது வரதாஞ்சநேயர் சுவாமி திருக்கோயில். மிக பெரிய விஸ்தரிப்பான கோயில். மிக பிரம்மாண்டமான கட்டடங்கள். சமீபத்தில்தான் கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது என்பதனை கட்டடங்களை பார்த்தவுடனே நாம் தெரிந்துக் கொள்ளலாம். கோயிலின் உள்ளே நுழைந்த உடனே, ஓர் அழகிய துளசி பிருந்தாவனம் கண்களில் தென்பட்டது. அதனை கண்டமாத்திரத்தில், ஏதோ ஒரு மத்வ மகானின் பிருந்தாவனம் போல் காட்சியளித்தது. மகானாகவே பாவித்து, துளசி பிருந்தாவனத்தை தரிசித்து இன்னும் சற்று கடந்து சென்றோம்.

அழகிய ராமர்

தூரத்திலிருந்தே நம்மால் “ஸ்ரீ வரதாஞ்சநேயர் சுவாமியை’’ தரிசிக்க முடிந்தது. அருகில் சென்றதும் மெய்சிலிர்த்தது. காரணம், காலங்காலமாக பழமையான அனுமன் என அவரை பார்த்தவுடனே மிக தெளிவாக உணரமுடிகிறது. அவருக்கு மேலே அழகிய ராமர், சீதா, லட்சுமணன் ஆகியோரின் சிறிய வடிவிலான விக்ரகம் காணமுடிகிறது. வரதாஞ்சநேயர் சுவாமியை வணங்கிய பின்னர், அங்கு பூஜை செய்யும் அர்ச்சகரிடத்தில் பேச்சுக் கொடுத்தோம். அவர் மேலும், வரதாஞ்சநேயர் சுவாமியை பற்றி பல தகவல்களை நம்மோடு பகிர்ந்துக் கொண்டார். அதன் விவரம் வருமாறு;

கேட்டதை தரும் அனுமன்

500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வரதாஞ்சநேயர் சுவாமியை, மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதற்கான ஆதாரங்கள், வரலாற்று சிறப்புமிக்க பல புத்தகங்களிலும், கோயிலின் கல்வெட்டுகளிலும் உறுதியளிக்கின்றன. ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், துவைத சித்தாந்தத்தில் புகழ்பெற்ற தாசர்களான ஸ்ரீ புரந்தரதாசர் மற்றும் கனகதாசர் ஆகியோரின் குரு என்பது தெரிந்ததே! மனவருத்தத்துடன் வந்து வேண்டும் பக்தர்களுக்கு, அவர்கள் கேட்கும் வரத்தை அளித்து, அதனை உடனடியாக நிறைவேற்றி வைப்பதனால், இவர் “வரதாஞ்சநேயர் சுவாமி’’ என பெயர் பெற்றார். தலைக்கு மேல் கையை உயர்த்தி, மறுகையில் செண்டு மலரை வைத்துக் கொண்டும், இடுப்பில் வாளுடன் மிக அழகாக காட்சியளிக்கிறார், வரதாஞ்சநேயர்.

கலைநிகழ்ச்சிகள்

அனுமன் ஜெயந்தி அன்று வெளிநாடுகளில் இருந்தெல்லாம்கூட பக்தர்கள் வருகை புரிவார்கள். அன்றைய தினம் மட்டும் சுமார் 4.00 மணிக்கெல்லாம் கோயிலின் நடை திறக்கப்படும். மின்விளக்குகளால் கோயிலே ஜோலிக்கும். அன்று சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்படும். குறிப்பாக, வரதாஞ்சநேயருக்கு வெள்ளிக் கவசங்கள் இட்டு, கிரீடம், முத்து மாலை ஆகியவைகள் அணிவித்து, பல வகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக அனுமனுக்கு மிகவும் பிடித்த வடை மாலை சாற்றப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். இதை காணவே கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருக்கும். அதன் பிறகு, அன்னதானங்கள் வழங்கப்பட்டு, இரவு 11.00 மணிக்குத்தான் நடை மூடப்படும். அதே போல், சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் பஜனைகள், கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். என்று கூறினார்.வரதாஞ்சநேயர் சுவாமியை தரிசித்துவிட்டு வெளியே பிரதட்சணமாக வரும்போது, நாகர்கள், நவகிரகங்கள் ஆகிய ஒரு சில சந்நதிகளை மட்டுமே காணமுடிகிறது. ஆக, ஸ்ரீ வரதாஞ்சநேயர் சுவாமி மட்டுமே பிரத்தேகமாக இங்கு கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

எப்படி செல்வது: பெங்களூர், மெஜஸ்டிக் கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் இருந்து 12 கி.மீ., பயணித்தால், இந்த திருக்கோயிலை அடைந்துவிடலாம். தொடர்புக்கு: 063660 51832. காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

 

The post வரத்தை அளித்து உடனே நிறைவேற்றும் வரதாஞ்சநேயர் appeared first on Dinakaran.

Read Entire Article