டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் அகஸ்தியன்பள்ளி-திருவாரூர் ரயில் சேவை; சென்னை வரை நீட்டிக்க கோரிக்கை: தினசரி இருமுறை இயக்க வலியுறுத்தல்

2 weeks ago 2

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி-திருவாரூர் ரெயில் சேவையை சென்னை வரை நீட்டிக்க வேண்டும் என தென்னக ரெயில்வேக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருவாரூர் வரை செல்லும் ரெயில் சேவையை சென்னை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என வேதாரண்யம் பகுதி மக்கள் தென்னக ரெயில்வேக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அவர்கள் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் தாலுகாவில் சுமார் 2 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பிரதான தொழிலான உப்பு, நெல், முல்லைப்பூ, மா, முந்திரி சாகுபடி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கும் லாரி மற்றும் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ரெயில் சேவை கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு அகல ரெயில் பாதையாக மாற்றி மக்கள் பயன்பெறும் வகையில் தினசரி இரண்டு முறை அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை சென்று வந்தது. தற்போது இந்த ரெயில் சேவை அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருவாரூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த பயன் பெற்று வருகின்றனர். தற்போது இந்த அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருவாரூர் வரை ரயில் பாதை மின் மயமாக்கல் திட்டத்தில் மின்பாதையாக மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் முடிவு பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த ரெயில் சேவையை சென்னை வரை நீட்டிப்பு செய்தால் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். அவ்வாறு சென்னை வரை நீட்டிப்பு செய்தால் அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும். வெளி மாநிலங்களுக்கும் இணைப்பு சேவை பெற்று செல்ல ஏதுவாக இருக்கும். மேலும் சரக்கு சேவை தொடங்கிய காலகட்டத்தில் இங்கு உற்பத்தியாகும் உப்பு, மீன், கருவாடு, மாம்பழம், பூ ஆகியவை ஏற்றுமதிக்கும் ஏற்றதாக அமையும். எனவே விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள். பொதுமக்கள் நலன்கருதி அகஸ்தியம்பள்ளி இருந்து வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் சந்திப்புவரை செல் லும் ரெயில் சேவையை சென்னை சந்திப்பு வரை நீட்டிப்பு செய்து தர வேண்டும். பெருநகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களுக்கு இணைப்பு ஏற்படுத்தி தர வேண்டும். டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ரெயில் சேவையை தினசரி இரண்டு முறை இயக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் அகஸ்தியன்பள்ளி-திருவாரூர் ரயில் சேவை; சென்னை வரை நீட்டிக்க கோரிக்கை: தினசரி இருமுறை இயக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article