
சென்னை,
'அயோத்தி, கருடன், நந்தன்' உள்ளிட்ட வெற்றிப்படங்களையடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமலி'. இந்த படத்தை 'குட் நைட்' படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில் இலங்கைத் தமிழர்களாக நடித்துள்ள சசிகுமார் சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடைப்பெற்றது. படத்தின் புரோமோசன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புரோமோசன் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது, அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டு இருந்த இயக்குநர் அபிஷன் ஜீவந்த் தனது தோழிக்கு நன்றி கூறினார். அப்போது அவர் பேசும்போது, "அகிலா இளங்கோவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அகிலா உன்னை எனக்கு 6வது படிக்கும் போது இருந்தே தெரியும். 10-வதில் இருந்து நாம் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக உள்ளோம். இந்த இடத்தில் நின்று கொண்டு உன்னிடத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி என்னை கல்யாணம் செய்துகொள்கிறாயா என்றுதான் கேட்கணும்.
நான் எப்போது எல்லாம் மிகவும் மனமுடைந்து காணப்பட்டேனோ அப்போது எல்லாம் எனக்கு ஊக்கம் கொடுத்தவர் அகிலா. நான் இன்றைக்கு சிறந்த மனிதனாக இருக்க எனது அம்மா எப்படி காரணமோ அதேபோல் அகிலாவும் ஒரு காரணம். நன்றி அகிலா" என அவர் தனது காதலை தெரிவித்தார். அபிஷன் ஜீவிந்த் காதலைச் சொன்னதும், அவரது தோழி அகிலா இளங்கோவன் எமோஷனலாகி அழுதுவிட்டார். இது தொடர்பான காட்சிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.