டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

4 months ago 14

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஒபலபுரா கிராமம் அருகே நேற்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் பெண் உள்பட 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கடும் பனிமூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடுபனி இருந்தது. இந்த நிலையில் 3 பேர் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற டிராக்டரின் டிரெய்லரில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று விழுந்தது.

மேலும் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ேமாதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் டிரெய்லரில் சிக்கி நின்றபடி இருந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பலியானவர்கள் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா குடேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஷாகீர் உசேன் (வயது 18), மம்தாஜ் (38), முகம்மது ஆசீப் (12) ஆகியோர் என்பதும், தாய், மகன்கள் என்பதும் தெரியவந்தது. ஷாகீர் உசேன் பி.யூ.சி. முதலாம் ஆண்டும், முகம்மது ஆசீப் 6-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

பலியான 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக துமகூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மோட்டார் சைக்கிளில் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article