சென்னை,
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் யூடியூப் புகழ் டி.டி. எப். வாசன். இவர் பைக்கை வேகமாக ஓட்டி அந்த வீடியோவை, யூடியூப்பில் வெளியிடுவார். பைக்கை வேகமாக ஓட்டி சாகசம் செய்து சர்சையில் சிக்கினார். அதே போல் அவ்வப்போது எதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் டி.டி.எப். வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த வீடியோவில் தான் அந்த மலைப்பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சென்னை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, டி.டி.எப்.வாசனின் வீடு காரமடை வெள்ளியங்காட்டில் இருப்பதால். அவர் வீட்டிற்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட விலங்குகளை வீட்டில் வளர்த்து வருகிறாரா என்பது குறித்து சோதனை நடத்தினர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "மலைப்பாம்புடன் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக யூடியூபர் டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறை சார்பில் சோதனை செய்தோம். அவர் வீட்டில் வனத்துறையால் தடை செய்யப்பட்ட விலங்குகள், பிராணிகளை வளர்த்து வருகிறாரா என்பது குறித்து ஆய்வு செய்தோம் . ஆனால் அப்படி எந்த விலங்குகளும், பிராணிகளும் அவர் வீட்டில் இல்லை. இந்த சோதனை தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளோம்' என்று கூறினார்கள்.