புதுடெல்லி: “டிஜிட்டல், ரயில்வே, விண்வௌி உள்ளிட்ட துறைகளில் சிலியுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது” என பிரதமர் மோடி கூறியுள்ளார். சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் போன்ட் 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவரை ஒன்றிய வௌியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கரீட்டா வரவேற்றார். தொடர்ந்து சிலி அதிபர் கேப்ரியல், காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், சிலி அதிபர் கேப்ரியல் போரிக் போன்ட்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்தியாவும், சிலியும் உலக வரைபடத்தில் வெவ்வேறு முனைகளில் இருக்கலாம்.
நம்மை பிரிக்கும் பெருங்கடல்கள் இருக்கலாம். ஆனால் இயற்கை நம்மை தனித்துவமான ஒற்றுமைகளுடன் இணைத்துள்ளது. டிஜிட்டல், பொது உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரயில்வே, விண்வௌி மற்றும் பிற துறைகளில் சிலியுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியா – சிலி நாடுகளின் கூட்டாண்மை மேலும் வலுப்படுத்தப்படும்.
வேளாண்மை துறையில் இருநாடுகளின் திறன்களை இணைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய ஒத்துழைப்பு செய்யப்படும். பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை வரவேற்கிறோம். போதைப்பொருள் கடத்தல், தீவிரவாதம் போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்ள இருநாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்போம்” என்றார்.
The post டிஜிட்டல், ரயில்வே, விண்வௌி உள்ளிட்ட துறைகளில் சிலியுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்: பிரதமர் மோடி தகவல் appeared first on Dinakaran.