தாம்பரம், ஏப். 3: டிஜிட்டல் அரஸ்ட், டிரேடிங் இன்வெஸ்ட்மென்ட் என்கிற பெயரில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார்(52). கடந்த பிப்ரவரி மாதம் இவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சிலர் தாங்கள் மும்பை போலீசார் என்றும், தங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து விடுவோம் என மிரட்டி ஆன்லைன் மூலமாக ரூ.50 லட்சத்தை பறித்துச் சென்றனர். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ்குமார் சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரக சைபர் குற்ற பிரிவில் புகார் அளித்தார்.
இதேபோல், பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த சரத்(32) என்பவரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர்கள் ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம், என ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் மூலமாக ரூ.1 லட்சத்து 97ஆயிரத்து 264 பணத்தை பறித்தனர். இதுகுறித்து சரத் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த இரண்டு புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்தனர். அதில், டெல்லியை சேர்ந்த பிரின்ஸ் பிரகாஷ்(எ) ராயிஸ்(25) மற்றும் அவரது கூட்டாளிகள் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனிடையே, கேரளாவில் ஓட்டல் தொழிலதிபரை டிஜிட்டல் முறையில் கைது செய்து விடுவோம் என மிரட்டி 29 லட்சத்து 91 ஆயிரம் பணத்தை ஏமாற்றிய வழக்கில் கேரளா போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து, தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் பிரின்ஸ் பிரகாஷ் (எ) ராயிஸ் என்பவரை கடந்த மார்ச் மாதம், 6ம் தேதி கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், பிரின்ஸ் பிரகாஷின் கூட்டாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் 15 லட்சம் ரூபாய் புகார் தாரர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டது.
இதேபோல பிரின்ஸ் பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மொத்தம் சுமார் 82 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளதாகவும், பொதுமக்கள் சைபர் குற்றங்களில் உட்படாமல் இருக்கவும், குறிப்பாக பகுதிநேர வேலை, டிஜிட்டல் அரஸ்ட், பிரபல நிறுவனங்களின் பேரில் டிரேடிங் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கேம் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று சைபர் குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மக்களிடம் இருந்து மோசடி செய்யப்படும் பணம் சைபர் குற்றவாளிகளால் கிரிப்டோ கரன்சி மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பொதுமக்கள் எந்தவிதமான நிதி முதலீடுகளும் செய்யும்முன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், இதுபோன்ற மோசடிகளிலிருந்து தங்களை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டிஜிட்டல் அரஸ்ட், டிரேடிங் இன்வெஸ்ட்மென்ட் பெயரில்ரூ.82 லட்சம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது appeared first on Dinakaran.