டிசம்பர் 11ம் தேதி அண்ணாசாலையில் ரூ.20 லட்சம் பறிப்பு; கைதான சிறப்பு எஸ்ஐக்கள் சன்னி லாய்டு ராஜா சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

2 hours ago 1

சென்னை: அண்ணாசாலையில் கடந்த டிசம்பர் 11ம் தேதி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்த வழக்கில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக ஏற்கனவே வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு எஸ்ஐக்கள் சன்னி லாய்டு மற்றும் ராஜா சிங் உட்பட 7 பேர் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சன்னி லாய்டு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் ேததி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் வழிமறித்து சோதனை செய்தார். அப்போது அவரது பையில் ரூ.20 லட்சம் பணம் இருந்ததை கண்ட ராஜா சிங், இது ஹவாலா பணமா என கூறி நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில்
பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி மிரட்டி ரூ.20 லட்சம் பணத்தை பறித்து சென்றனர்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் படி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி ஆதாரங்களின் படி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேர் அளித்த தகவலின் படி இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியான சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சன்னி லாய்டுவை போலீசார் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து சன்னிலாய்டுவை திருவல்லிக்கேணி போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீடுகளுக்கும் போலீசார் அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது சன்னி லாய்டுவின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் 2 கிரவுண்டில் 3 மாடி வீட்டில் நடந்த சோதனையில் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், வேளச்சேரி பகுதிகளில் பல கோடிக்கு நிலங்கள் வாங்கி குவித்து இருந்து சொத்து பத்திரங்கள் மற்றும் ஆவடியில் 1,400 சதுரடியில் 3 மாடி வீடு, கிழக்கு கடற்கரையில் ரிசாட்டுகள் வாங்கிய பத்திரங்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். சன்னி லாய்டுயிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து பத்திரங்கள் குறித்து விசாரித்த போது, அவர் தனது மனைவி ஆசிரியை மற்றும் ஜாம்பஜாரில் அமைத்துள்ள உடற்பயிற்சி கூடம் மூலம் வந்த வருமானம் மற்றும் எனது மனைவி மற்றும் எனது பெயரில் வங்கியில் கடன் பெற்று இந்த சொத்துக்கள் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் பல கோடி மதிப்புடையது. இதனால் சன்னிலாய்டு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு அதில் வந்த வருமானத்தில் பல இடங்களில் அசையா சொத்துக்கள் வாங்கி குவித்து இருந்தது விசாரணையின் மூலம் தெரியவந்தது. மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அண்ணாசாலையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் பணத்தை ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த பணத்தை சிறப்பு உதவி ஆய்வாளரான ராஜா சிங் மற்றும் சன்னிலாய்டு ஆகியோர் தங்களது நண்பர்களான வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு மற்றும் வணிக வரித்துறையில் பணியாற்றும் சதீஷ் மற்றும் சுரேஷ் ஆகிய 7 பேருடன் இணைந்து காவல் நிலையத்தில் ரூ.20 லட்சம் பணத்தை கணக்கு காட்டிவிட்டு மீதமுள்ள ரூ.20 லட்சம் பணத்தை பறித்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு உட்பட 7 பேர் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்துள்ளனர். இந்த வழக்கில் தற்போது சிறையில் உள்ள 5 பேரையும் மீண்டும் கைது செய்து அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த ஆயிரம் விளக்கு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதேநேரம் தலைமறைவாக உள்ள வணிக வரித்துறை அதிகாரிகள் சதீஷ் மற்றும் சுரேஷை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

The post டிசம்பர் 11ம் தேதி அண்ணாசாலையில் ரூ.20 லட்சம் பறிப்பு; கைதான சிறப்பு எஸ்ஐக்கள் சன்னி லாய்டு ராஜா சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article