துபாய்: சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு சச்சரவுகளும், விவாதங்களும் எழுந்தது. இதனை ஒன்றுக்கு பின் ஒன்றாக ஐசிசி தீர்த்து வந்தது. பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாமல் ஹைபிரிட் மாடல் முறைப்படி துபாயில் விளையாடுகிறது. இந்த சூழலில் இந்திய அணி அணிந்திருக்கும் ஜெர்சியில், போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் பெயர் சேர்க்கப்படாது என்று முதலில் பிரச்சனை இருந்தது.
அதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் சேர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவின் தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முதலில் போட்டி நடைபெறும் இரண்டு அணிகளின் கொடி மட்டும்தான் பொருத்த ஐசிசி அறிவுறுத்தி இருப்பதாக பாகிஸ்தான் சப்பை கட்டு கட்டியது. ஆனால் இந்தியாவின் எதிர்ப்புக்கு அடிபணிந்து இந்திய தேசியக் கொடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வைத்தது. இந்த சூழலில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது.
அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பின் போது ஐசிசி லோகோவுக்கு கீழ் பாகிஸ்தான் என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. போட்டிகள் துபாயில் நடந்தாலும் அது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவது தான் என்பதால் பாகிஸ்தான் பெயர் டிவி லோகோவில் இடம் பெற வேண்டும் என ஐசிசி இடம் பாகிஸ்தான் முறையிட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள ஐசிசி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் பாகிஸ்தான் பெயர் அதில் இடம்பெறவில்லை என்றும், துபாயில் நடைபெறும் அடுத்த போட்டியில் நிச்சயம் பாகிஸ்தான் பெயர் டிவி லோகோவின் இடம் பெறும் என்று உறுதியளித்திருக்கிறது.
The post டி.வி. லோகோவில் பாகிஸ்தான் பெயர்: ஐசிசி சம்மதம் appeared first on Dinakaran.