
சென்னை,
முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை, ஆகஸ்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. 8 அணிகளும் சேர்ந்து அஸ்வின், சாய் சுதர்சன், அபிஷேக் தன்வர் உள்பட மொத்தம் 39 வீரர்களை தக்க வைத்தனர். விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் பதிவு செய்த புதிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
இதில் ஒவ்வொரு அணியும் ரூ.80 லட்சம் செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தக்க வைத்துள்ள வீரர்களுக்குரிய ஊதியம் போக மீதமுள்ள தொகையை வைத்துத்தான் எஞ்சிய வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 16 முதல் அதிகபட்சமாக 20 வீரர்கள் வரை இருக்க வேண்டும்.
இந்நிலையில் டி.என்.பி.எல். ஏலம் சென்னை சேப்பாக் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள அரங்கில் இன்று நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் முதல் வீரராக இந்திய அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் வந்தார்.
அவரை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அவரை ரூ. 18 லட்சத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வாங்கியது. மேலும் ஸ்வப்னில் சிங் (ரூ. 10.8 லட்சம்), மொகித் ஹரிஹரன் (ரூ.5.2 லட்சம்), உள்ளிட்ட சில வீரர்களையும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வாங்கியுள்ளது.
தமிழக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான எம். முகமதை ரூ.18.4 லட்சத்திற்கு சேலம் ஸ்பார்டன்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் இந்திய அணியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தரை ரூ. 6 லட்சத்திற்கு திருச்சி அணி வாங்கியுள்ளது. ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.