
சென்னை,
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் மின் கட்டணத்தை 3 சதவீதம் உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 2024 ஜூலையில் 4.8 சதவீதம் 2023 ஜூலையில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை தமிழக அரசுதான் பரிசீலிக்கும். ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை தொடர்பாக முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.