
சென்னை,
அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டத்தில் வந்த அர்ச்சகரை வைத்து டாஸ்மாக் கடையில் தமிழக அரசு பூஜை செய்ய வைத்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது. இதுதான் திராவிட மாடலா? என்று குறிப்பிட்டு பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் வதந்தியே. அர்ச்சகர் பூஜை செய்த வீடியோவில் உள்ளது டாஸ்மாக் கடை அல்ல. மேலும் அவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நபரும் இல்லை. கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பகிரப்பட்டு வரும் இந்த பழைய வீடியோவை திரித்து வதந்தி பரப்பிவருகிறார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.