சென்னை: டாடா நிறுவனத்திடம் பல கோடி ரூபாய் பேர விவகாரத்தில் மத்திய சென்னை உதவி ஐஜி அதிரடியாக திண்டுக்கல்லுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரில் 17.22 ஏக்கர் நிலம், டாடா நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை சுமார் பல நூறு கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக வில்லிவாக்கத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை அணுகியுள்ளது. அங்கு சார்பதிவாளராக உள்ள பிரகாஷ் ஆய்வு செய்தபோது, இந்த நிலம் மேய்க்கால் புறம்போக்கு நிலமாக உள்ளது தெரியவந்தது. மேய்க்கால் புறம்போக்கு நிலமாக இருந்தால் அதற்கு மதிப்பு ஜீரோதான். இதனால் மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த நிலத்தை தமிழக அரசு, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு, அரசாணை மூலம் வழங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துக்களை ஒன்றிய அரசு விற்பனை செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக அம்பத்தூரில் உள்ள 17.22 ஏக்கர் நிலத்தையும் அரசாணை மூலம் டாடா நிறுவனத்தின் அங்கமான டிசிஎஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது. அப்போது, பத்திரப்பதிவு செய்யப்படவில்லை. வழக்கமாக அரசிடம் இருந்து ஒரு இடத்தை தனியார் நிறுவனம் அல்லது தனி நபர் வாங்கும்போது பத்திரப்பதிவு செய்வது வழக்கம். ஆனால் டாடா நிறுவனம் பத்திரப்பதிவு செய்யாததால், அரசுக்கு சுமார் ₹90 கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான் டாடா நிறுவனம், தகவல் தரவு நிறுவனத்துக்கு விற்பனை செய்யும்போதுதான் பதிவுத்துறைக்கு, பதிவு செய்ய வந்துள்ளது. தற்போதும் ₹90 கோடிக்கு மேல் பத்திரப்பதிவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் நிலத்தின் மதிப்பை குறைத்து மதிப்பிடுவதற்காகத்தான் சார்பதிவாளரை டாடா நிறுவனம் அணுகியது தெரியவந்தது. ஆனால் அவரோ, இதை மத்திய சென்னை மாவட்ட பதிவாளராக உள்ள உதவி ஐஜி மகேஷுக்கு, நிலத்திற்கு மதிப்பு நிர்ணயம் செய்யும்படி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன்பின்னர் தான் டாடா நிறுவனத்திடம் சுமார் ₹17 கோடி வரை பேரம் நடந்துள்ளது. ஆனால் அவ்வளவு பணம் ெகாடுக்க விரும்பாத டாடா நிறுவனம், தலைமைச் செயலக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தது. இது குறித்து அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், ஐஜி ஆலிவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் சார்பதிவாளர் பிரகாஷ், நெல்லை பத்திரப்பதிவுத் துறை மேனேஜராக மாற்றப்பட்டார். அவருக்கு 2 ஆண்டுகள் பதிவு பணி வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மத்திய சென்னை மாவட்ட பதிவாளராக உள்ள உதவி ஐஜி மகேஷ், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகப்பிரிவு உதவி ஐஜியாக அதிரடியாக மாற்றப்பட்டார். டாடாவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஐஜிக்கு வேண்டியவரிடம் வசூல்
பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றி தற்போது, டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினராக பணியாற்றும் அதிகாரி ஒருவரின் நண்பர், திருப்பத்தூர் பதிவு அலுவலகத்தில் பதிவுக்காக சென்றுள்ளார். அவருக்கு விரைந்து உதவி செய்யும்படி அதிகாரி, மாவட்ட பதிவாளர் பிரகாஷிடம் கேட்டுள்ளார். அவரும் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு இந்த தகவலை கூறி விரைந்து முடித்துக் கொடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால் பதிவுக்கு வந்தவரிடம் ₹80 ஆயிரம் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் எழுந்ததும், பதிவுத்துறை முன்னாள் ஐஜி பரிந்துரைத்தவரிடமே லஞ்சம் வாங்கியதை கண்டு ெகாள்ளாமல் இருந்ததாக மாவட்ட பதிவாளர் பிரகாஷ், அரியலூர் தணிக்கை மாவட்ட பதிவாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
The post டாடா நிறுவனத்திடம் பல கோடி ரூபாய் பேரம் பேசிய விவகாரம்; உதவி ஐஜி திண்டுக்கல்லுக்கு மாற்றம்: வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த் உத்தரவு appeared first on Dinakaran.