புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் இந்திய நேரப்படி வரும் 8ம் தேதி தொடங்குகிறது. இம்முறை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான புதிய இந்திய அணி தென்னாப்பரிக்காவை எதிர்கொள்கிறது.
அந்தத் தொடரின் முதல் போட்டி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 2007 டி20 உலகக் கோப்பையில் இதே டர்பன் மைதானத்தில் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் ப்ராடுக்கு எதிராக யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்தார்.
இந்நிலையில், தன்னுடைய குருவான யுவராஜ் சிங் வரலாறு படைத்த மைதானத்தில் தாம் இந்தியாவுக்காக விளையாட உள்ளதை நினைத்து பெருமைப்படுவதாக அபிஷேக் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இங்கே நான் இப்போது தான் வருகிறேன். ஆனால் இதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். தற்போது இங்கே வந்துள்ளது என்னுடைய கனவு நிஜமாகும் தருணமாகும்.
2007-ல் இங்கே யுவராஜ் சிங் அடித்த 6 சிக்ஸர்களால் நான் உத்வேகத்தை பெற்றேன். இங்கே முதல் நாள் வந்ததும் அவர் எந்த பகுதியில் இருந்து சிக்ஸர்களை அடித்தார் என்பதை பார்க்க முயற்சித்தேன். இந்த மைதானத்தில் அவர் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்கள் அடித்துள்ளார். அது சிறந்த நினைவு. அப்படியே என்னுடைய குடும்பத்துடன் பார்த்து விட்டு இந்தியாவின் வெற்றியை எங்கள் தெருவில் கொண்டாடியது நினைவிருக்கிறது.
அப்போது டர்பன் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பை பெறுவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் அப்போது கிரிக்கெட்டில் விளையாடுவது என்னுடைய கெரியராக இருக்கும் என்று நினைத்தேன். இங்கே நான் விளையாடப் போவதை யுவராஜ் சிங் பார்ப்பார் என்று நம்புகிறேன். அவரை பார்த்து தான் நான் உத்வேகம் அடைந்தேன். எனவே அவரை இந்தப் போட்டியில் நான் பெருமைப்பட வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.