டபிள்யூபிஎல் பெண்கள் லீக் டி20 வதோதராவில் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் குஜராத்-பெங்களூர் மோதல்

3 months ago 7

வதோதரா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியை போன்று பெண்களுக்கான டபிள்யூபிஎல் தொடரை ஆண்டு தோறும் பிசிசிஐ நடத்துகிறது. 3வது சீசன் தொடர் இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், யுபி வாரியஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் மார்ச் 11ம் தேதி வரை வதோதரா உட்பட 3 நகரங்களில் நடக்கிறது. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் மும்பையில் மார்ச் 13, 15 தேதிகளில் நடைபெறும். இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூர்-குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

போட்டியில் களம் காணும் அணிகளில் இந்திய வீராங்கனைகள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகளும் இடம்பெற்று உள்ளனர். முதல் சீசன் மும்பை, நவி மும்பையில் மட்டும் நடைபெற்றன. 2வது சீசன் பெங்களூர், டெல்லி நகரங்களில் மட்டுமே நடந்தன. இந்த முறை வதோரா (குஜராத்), பெங்களூர் (கர்நாடகா), லக்னோ (உத்ரபிரதேசம்), மும்பை (மகாராஷ்டிரா) என 4 நகரங்களில் நடக்கிறது.

* பூஜா, ஆஷா திடீர் விலகல்
டபிள்யூபிஎல் பிரிமீயர் லீக் இன்று தொடங்க உள்ள நிலையில் மும்பை ஆல்ரவுண்டர் பூஜா வஸ்ட்ரகர், பெங்களூர் சுழல் ஆஷா ஷோபனா ஆகியோர் காயம் காரணமாக நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் பருனிகா சிசோடியா(மும்பை), நுசாத் பர்வீன்(பெங்களூர்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

* கலக்க போகும் தமிழக வீராங்கனைகள்
டபிள்யூபிஎல் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீராங்கனைகள் கமலினி குணாளன் (மதுரை), கீர்த்தனா பால கிருஷ்ணன் (சென்னை) ஆகியோர் மும்பை அணியில் இடம் பிடித்துள்ளனர். கூடவே அனுபவ வீராங்கனையான ஹேமலதா தயாளன் (சென்னை) மீண்டும் குஜராத் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

போட்டிகள் எங்கெங்கு நடக்கிறது?
வதோதரா (லீக் சுற்று) பிப்.14-பிப்.19 6 போட்டிகள்
பெங்களூர் (லீக் சுற்று) பிப்.21-மார்ச் 1 8 போட்டிகள்
லக்னோ (லீக் சுற்று) மார்ச் 3-மார்ச் 8 4 போட்டிகள்
மும்பை (லீக் சுற்று) மார்ச் 10-மார்ச் 11 2 போட்டிகள்
எலிமினேட்டர் – மார்ச் 13, இறுதி ஆட்டம் – மார்ச் 15

The post டபிள்யூபிஎல் பெண்கள் லீக் டி20 வதோதராவில் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் குஜராத்-பெங்களூர் மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article