டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்

2 weeks ago 2

சென்னை ,

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

டங்ஸ்டன் சுரங்கம் ரத்து மதுரை மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. கனிம வளத்தை விட மக்களின் நலனே முக்கியம் எனக்கருதி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது.

மதுரை மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேலூர் தொகுதிக்குட்பட்ட நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை ரத்து செய்து மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.

தமிழ் கல்வெட்டுகள், சமணப் படுகைகள், பழமையான குடைவரைக் கோயில்கள் போன்ற தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களோடு, ஏரிகளும், குளங்களும் அடங்கிய இயற்கை வளங்களையும், பல்லுயிர் பாரம்பரிய தளத்தையும் பாதுகாக்கும் வகையில் முடிவெடுத்திருக்கும் மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிய செப்டம்பர் 2023 முதல் ஏலம் முடிவடைந்த நாளான நவம்பர் 7, 2024 வரை எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அடர்த்தியாக மக்கள் வசிக்கும் மேலூர் பகுதியில், டங்ஸ்டன் திட்டம் வர உறுதுணையாக இருந்த திமுக அரசை மதுரை மாவட்ட மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் பிரதமருக்கு கடிதம் எழுதியும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கபட நாடகமாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்ததாக கூறுவது, "பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைக்குமாம்"என்ற கதையையே நினைவு படுத்துகிறது.

தமிழகத்தில் மக்களை போராட தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசியல் பலனடைய நினைத்த திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையிலும், கனிம வளத்தை விட மக்கள் நலனே முக்கியம் எனக்கருதியும் இம்முடிவை எடுத்திருக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கும் மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழகத்தில் இயற்கை வளங்களுக்கும், பண்டைய கால புராதானச் சின்னங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவித திட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

Read Entire Article