டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: திமுக, காங்கிரஸ் நோட்டீஸ்

1 month ago 5

டெல்லி: டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக, காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 ஊர்கள் அடங்கிய பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து உள்ளாட்சிகள் தினத்தன்று அரிட்டாபட்டியில் நடந்த ஊராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்க ஆய்விற்கு கூட தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதி தராது என உறுதியளித்தார்.

அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, புலிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளரிப்பட்டி, கிடாரிப்பட்டி, ஆமூர் மற்றும் எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கம்பூர், கேசம்பட்டி, கருங்காலக்குடி, அய்யாபட்டி, கச்சிராயன்பட்டி மற்றும் தும்பைப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே நேற்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக, காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாக்கூரும் நோட்டீஸ் அளித்துள்ளார்.

The post டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: திமுக, காங்கிரஸ் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article