பிரபஞ்சத்தில் அதர்மம் தலை தூக்கும் பொழுது தெய்வங்கள் அவதாரம் எடுப்பார்கள். சிவபெருமான், பக்தர்கள் நலன் கருதி தன் 64 திருமேனிகளில் ஒன்றான ஞான வடிவமாக தோன்றினார். ஞான குரு அல்லது ஆதிகுரு என்றும் அழைப்பர்.
தட்சிணா மூர்த்தி அவதாரம்
படைக்கும் கடவுள் பிரம்மன். அவரின் புத்திரர்கள் நால்வர். சனகர், சனாதனர், சனந்தனர், சரத்குமாரர் என்பவராவார். இவர்களை சுருக்கமாக சனக்காதி முனிவர்கள் என்றும் கூறுவர். இம்முனிவர்கள் ஞானம் பெற விரும்பினர். சரியான வழி காட்டக் கூடிய குருவை தேடினர். தன் தந்தையான பிரம்மாவிடம் சீடனாக சேரலாம் என முடிவு செய்தனர். ஆனால், பிரம்மாவோ படைக்கும் பணியில் ஈடுபட்டு ஆழ்ந்து இருப்பதனால், அவரிடம் கற்க இயலாது என முடிவெடுத்தனர். காக்கும் கடவுளான திருமாலிடம் சென்று யோகம், ஞானம் பெற வைகுண்டம் சென்றனர். மோகனப் பிரியனான திருமால், திருமகளுடன் இனிமையானச் சூழலில் உரையாடிக் கொண்டு இருப்பதைக் கண்டனர்.
அவரிடம் ஞானம் பெற இயலாது என் தீர்மானித்தனர்.கைலாயம் சென்று சிவபெருமானிடம் ஞானத்தை பற்றிக் கேட்கலாம் என முடிவெடுத்து கிளம்பினர். கைலாயத்தில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் உரையாடிக் கொண்டு இருந்தாலும், சனக்காதி முனிவர்கள் ஞானத்தைத் தேடி அலைவதை அறிந்தார். தானும் பார்வதி தேவியோடு பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து ஞானம் பெறாமல் விரக்தி அடைவர், என எண்ணி ஓர் உபாயம் செய்தார். தன்னுடைய 64 திருமேனிகளில் ஒன்றான தட்சிணாமூர்த்தி அவதாரம் எடுத்து அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
ஆல மரத்தின் அடியில் பதினாறு வயது சிறுவன், தன் வலது காலில் ஒருவனை மிதித்து இடது காலை மடக்கி வலது தொடை மேல் வைத்து அமர்ந்து இருப்பதைப் பார்த்து பிரமித்தனர். சிறுவனின் முகத்தில் தோன்றிய பிரகாசமான ஒளி பொருந்திய சாந்த சொரூபத்தைக் கண்ட சனக்காதி முனிவர்கள், அவரையே குருவாக ஏற்றனர்.தட்சிணாமூர்த்தியும், சனக்காதி முனிவர்களை சீடர்களாக ஏற்று ஞானத்தைப் போதிக்க முற்பட்டார். முனிவர்கள் கேட்ட வினாவிற்கு எல்லாம் சலிக்காமல் பதில் உரைத்தார். பிரபஞ்சத்தில் ஞானம் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று வினாக்கள் தொடுத்துக் கொண்டே வந்தனர்.
சனக்காதி முனிவர்கள் மனம் நிறைவடையவில்லை என்பதை அறிந்து கொண்டார். சட்டென தட்சிணாமூர்த்தி ஒரு அற்புதமான செயலைச் செய்தார். சின் முத்திரை அடையாளம் காட்டினார். கேள்விக் கணைகள் தொடுத்த சனக்காதி முனிவர்கள் சின் முத்திரையை கண்ட அக்கணமே அமைதியும் மகிழ்ச்சியும் அடைந்து ஞானம் பெற்றனர்.
எல்லா சிவாலயங்களிலும் தட்சிணாமூர்த்தி, கருணையின் வடிவான சிவபெருமானின் கருவறைக்கு பின்புறம் (வெளிப்புறச்) சுவற்றில் தென்திசை நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தட்சிணம் என்றால் தெற்கு என்றும் ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம் “தஷணா” என்பதன் விளக்கம். ‘த’ – அறிவு. ‘ஷ’ – தெளிவு. ‘ண’ – ஞானம் என்ற மூன்று பீஜ மந்திரங்களாகும்.
ஐம்பூதங்கள்
கை விரல்களில் ஐம்பூதங்கள் உள்ளன.
கட்டைவிரல் – நெருப்பு.
சுட்டு விரல் – காற்று.
நடுவிரல் – ஆகாயம்.
மோதிர விரல் – நிலம்.
சுண்டுவிரல் (அ) சின்ன விரல் – நீர்.
சின் முத்திரை அடையாளம்
அறிவின் உயர்நிலையான ஞானம் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பது கைவிரல்கள். அவை காட்டும் அடையாளங்கள்; வலக் கையில் ஆல்காட்டி விரல், கட்டை விரலால் தொட்டு மற்ற மூன்று விரல்கள் நீட்டி பிடிப்பதே சின் முத்திரையாகும். இந்த அடையாளத்தை வைத்து தியானம் செய்வதன் மூலம் மனதை ஒருநிலைப்படுத்த முடியும். அது மட்டும் அல்லாமல், இறைவனுடன் ஒன்று கலக்க முடியும் என்பது ஆன்றோர்களின் வாக்கு. எனவே, ஆல்காட்டி விரல் பரமாத்மாவையும். கட்டை விரல் ஜீவாத்மாவையும் குறிக்கும். மற்ற மூன்று விரல்கள் மும் மலங்களை உணர்த்தும். நடுவிரல் ஆணவ மலத்தையும், மோதிர விரல் கன்மமலத்தையும், சுண்டு விரல் மாயை மலத்தையும் உணர்த்தும்.
இறைவனுடன் ஒன்று கலக்க வேண்டுமெனில் மும்மலங்களை விட்டு ஒழித்தல் மிகமிக அவசியம். இவ்வாறு சின் முத்திரையில் தியானம் செய்யும் பொழுது ஆணவம், கன்மம், மாயை ஆகியவை நம்மை விட்டு விலகி இறை அருளாகிய ஞானம் கிடைக்கும். எதற்கெடுத்தாலும் பிறர் மீதுகோபம் படுவது நீங்கி சாந்த ரூபம் தோன்றும். பிணிகள் மறையும். தட்சிணாமூர்த்தியை பரமகுரு, ஞானகுரு என்றும் அழைப்பர்.
முயலகன் யார்?
திருப்பராய்ந்துறை என்று அழைக்கப்படும் “தாருகாவனத்தில்” முனிவர்கள் தங்கள் துணைவியாருடன் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர். முனிவர்கள் விசேஷ வேள்விகள் இடைவிடாது செய்து பல விதமான சக்திகள் பெற்றனர். அதனால் செருக்கும், தலைகணமும் அடைந்தனர். இறை சக்தியைவிட வேள்விக்கு அதீத சக்தி உண்டு என்று தவறான அறியாமை கருத்தில் மூழ்கிக் கிடந்தனர். சிவபெருமான் முனிவர்களின் இச்செருக்கை அழித்து புத்தி புகட்ட தீர்மானித்தார். அகத்தில் உள்ள அறியாமையாகிய இருளைப் போக்க சிவன் “பிச்சாடன்” கோலத்திலும், திருமால் “மோகினி” வடிவத்திலும் தாருகாவனம் வந்தனர்.
இவ்விருவரின் எழில் உருவம் கண்டு முனிவர்கள் மற்றும் அவர்களின் பத்தினிகள் மனம் தடுமாறி காம நிலையில் தவித்தனர். முனிவர்கள் “மோகினி” வடிவத்தில் உள்ள திருமாலை பின்தொடர்ந்தனர். சிவனின் “பிச்சாடனார்” அழகிய தோற்றம் கண்டு மனம் பறிகொடுத்து முனிவர்களின் பத்தினிகள், இவர் பின்னே சென்றனர்.ஒரு காலகட்டத்தில் தாங்கள் செய்த தவற்றை இருபாலரும் உணர்ந்தனர். காம குரோதத்தை அடக்கி வென்று வாழ்ந்த அறநெறி ரிஷிகள், நிலை தடுமாறிய முனிவர்கள் அவர்களின் மனைவிமார்கள் செய்த இழி செயலைக் கண்டு மனம் வெதும்பினர். பிச்சாடனரை வெறுத்தனர். அவரை கொல்ல “அபிசாரா” என்னும் வேள்வியை நடத்தினர்.
இவ்வேள்வித் தீயில் இருந்து புலி, யானை தோன்றின. சிவன் புலி, யானையை அழித்து அவற்றின் தோலை இடையிலும் புஜத்திலும் அணிந்துக் கொண்டார். பின்பு வேள்வித் தீயில் இருந்து மான், உடுக்கை சூலாயுதம் போன்றவை தோன்றி சிவபெருமானை அழிக்க வந்தன. நெருப்பில் தோன்றிய எல்லாவற்றையும் அழித்து தன் கையிலே ஆயுதங்களாக வைத்துக் கொண்டார்.
இறுதியாக முனிவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அச்சமயம் “அபஸ்மாரன்” என்ற அரக்கன் வேள்வித் தீயில் இருந்து வெளிப்பட்டு சிவபெருமான் மீது பாய்ந்தான். அவனோடு போரிட்டு அபஸ்மாரன் என்ற அரக்கனை தன் வலது காலில் போட்டு மிதித்தார். அப்பொழுது அவன் உடல் கோணல் மானலாக கிடந்தது. முனிவர்களின் ஆணவச் செருக்கையும் மும்மலங்களையும் அழித்தார் சிவபெருமான். சிவபெருமான் தட்சிணா மூர்த்தியாக தோன்றிய போது, அவர் வலது திருவடியில் அபஸ்மாரன் என்கின்ற அரக்கன் காக்கா வலிப்பு வந்தது போல அவன் உடல் கோணல் மானலாக இருந்தான்.
முயலகன் அறியாமை இருள். இவற்றை அகற்றி ஞானம் பெற வேண்டும் என்கின்ற சின்னமாக தட்சிணா மூர்த்தி வலது காலில் மிதித்து தோற்றம் அளித்தார். முனிவர்கள், பெண்களுக்கும் வந்தவர் சிவபெருமான் என்பதை உணர்ந்தனர். கர்மா வேள்வியைவிட இறை சக்தி உன்னதமானது என்பதை உணர்ந்தனர். சிவபெருமானின் திருவடியில் வணங்கி தாங்கள் செய்த தவற்றை மன்னிக்குமாறு கேட்டு பணிந்தனர். இறைவனும் அவர்களை தடுத்து ஆட்கொண்டார்.
“கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்வாம்’’
(திருவிளையாடற் புராணம்- பாடல்-13)
தட்சிணாமூர்த்தி வழிபடும் முறை
தட்சிணாமூர்த்தியை எவ்வாறு வணங்க வேண்டும் என்றால், நல்லெண்ணெய், தேங்காய், நெய் ஆகிய மூன்று எண்ணெய்களையும் கலந்து முக்கூட்டு எண்ணெயாக விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பாகும். முடிந்தால் 11 அல்லது 21 விளக்குகளை ஏற்றலாம். தீபச்சுடர் தட்சிணாமூர்த்தியை நோக்கியவாறு இருக்க வேண்டும். நற்பலன் கிடைக்கும். தட்சணாமூர்த்தியை சுற்றி வரும் போது 3,9,11 என்ற எண்ணிக் கையில் சுற்றி வர வேண்டும்.
அவருக்கு பிடித்தமானது தூய்மையான வெண்மையைத்தான் அவர் விரும்புவார். ஆதலால் முல்லைப் பூ, மல்லிப்பூ, ஜாதிப்பூ இவற்றை எல்லாம் வைத்து வணங்குவது சிறப்பு. பக்தர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யத்தையும் அள்ளி தரக்கூடியவர். மனத் தடுமாற்றம், குழப்பங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி நல்லருள் புரிபவர்.
தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒருவரா?
நிச்சயமாக இல்லை. தட்சிணாமூர்த்தி வேறு, குரு பகவான் வேறு. சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி, ஞானத்தை அளிக்க கூடியவர். விவேகம் நிறைந்தவர். மனிதர்களுக்கு யோகத்தையும், ஞானத்தையும் போதிப்பவர். தூயவெண்ணிற ஆடையை அணிபவர். மல்லிப்பூ முல்லைப்பூ வெள்ளை நிற பூக்களை சூடுபவர். இவரை வியாழக்கிழமை மட்டும் வணங்க வேண்டும் என்பது இல்லை, ஏழு நாட்களும், நாளும் கிழமையும் பார்க்காமல் எண்ணிய காரியங்கள் ஈடேற நாம் வணங்கலாம். கல்விக்கும் அதிபதி. பௌர்ணமி நாளில் சிவ ஆலயங்களுக்கு சென்று தம்பதியினராக தட்சிணாமூர்த்தியின் எதிரில் அமர்ந்து திருமுறை, சிவபுராணம் பாராயணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.
குரு பகவான் என்பவர் நவகிரகங்களில் ஒருவர். இவர் வியாழக்கிழமையில் மட்டும் வழிபட்டால் சிறப்பு. மேலும், இவர் மஞ்சளாடையை புனைந்து, மஞ்சள் நிற பூவை சூடுவர். கொண்டக் கடலை மாலையை அணிவார்.
தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்
“ஓம் யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹ தேவம் ஆத்மபுத்தி ப்ரகாசம்
முமுக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:’’
பொன்முகரியன்
The post ஞானம் தரும் தட்சிணாமூர்த்தி appeared first on Dinakaran.