சிவகாசி: தமிழகத்தின் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள் தயாரிக்கும் பணியில் இரவு, பகலாக தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மூலப்பபொருள் விலை குறைவால், இந்தாண்டு 10 சதவீதம் வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தமிழகத்தின் குட்டி ஜப்பான் என அழைக்கப்படுகிறது. இங்கு பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத் தொழில் பிரதானமாக உள்ளது. ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், டைரிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வியாண்டிற்குத் தேவையான நோட்புக்குகள் தயாரிக்கும் பணி 30க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லாங்சைஸ், பிராடிக்கல், கணக்கு, இரண்டு கோடு, நான்கு கோடு, கிராப் நோட்டுகள் என பல வகைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பலவித வண்ணங்களாலான பல்வேறு டிஸைன்களில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் நோட்டுகள் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகம் முழுவதும் பாட நோட்டுகளின் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10% விலை குறையும்
நோட்புக் தயாரிக்க ஒயிட் பேப்பர், பைண்டிங் அட்டை, பசை உள்ளிட்ட மூலப்பொருட்கள் தேவை. இவைகளின் விலையேற்றத்தால் கடந்த காலங்களில் நோட்டு புத்தகங்களின் விலை ஏறிச் சென்ற நிலையில், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மூலப் பொருளான பேப்பர் விலை குறைந்துள்ளதால் நோட்டுபுக் விலையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 15 சதவிகிதம் விலை குறைந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 10 சதவிகிதம் விலை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து நோட்புக் தயாரிப்பாளர்கள் கூறும்போது, ‘பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக சிவகாசியில் அச்சுத் தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பள்ளி நோட்டுகள் தரமாக இருப்பதால் தனிமவுசு உண்டு. நோட்டுகள் தயாரிக்க தேவையான காகிதம், அட்டை விலை கடந்த ஆண்டை விட குறைவாக கிடைத்தது., இதனால் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 10 சதவிகிதம் நோட் புத்தகம் விலையை குறைத்துள்ளோம்’ என்றனர்.
The post தமிழகத்தின் குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு படு ஸ்பீடு: 10 சதவீதம் விலை குறைய வாய்ப்பு appeared first on Dinakaran.