மனதைப் பௌர்ணமியாக மாற்றும் நாமம்

2 hours ago 4

நித்யா பராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா

இந்த இந்திரியங்கள், மனம் இவை எல்லாமுமே அம்பிகை நமக்குக் கொடுத்த பிரசாதம். இந்த இந்திரியங்கள், மனம் எல்லாமே தேவ சொரூபங்கள். தெய்வாம்சங்கள் கொண்டது. அதிலும் முக்கியமாக இந்த இந்திரியங்களுக்கெல்லாம் தலைமை வகிக்கக் கூடியது எதுவென்றால் மனம். இந்த மனம்தான் எல்லா விஷயங்களுக்கும் காரணமாக இருக்கிறது. இந்த மனமானது எப்போதுமே ஸ்வசொரூபமான அல்லது சொத் சொரூபமான ஆத்மாவோடு இருந்தது என்றால், அது எப்போதுமோ பிரகாசமாக இருக்கும். இந்த மனமானது எப்படி பிரகாசமாக இருக்குமென்றால், சூரியனுடைய ஒளியைப் பார்த்துக் கொண்டே இருக்கக் கூடிய, சூரியனுடைய ஒளியோடு ஒன்றி இருக்கக்கூடிய சந்திரன் மாதிரி பிரகாசமாக இருக்கும். சந்திரனானது சதாகாலமும் சூரியனுடைய ஒளியை வாங்கி… வாங்கி… எப்போதுமே பிரகாசமாக இருக்கக் கூடியவன் ஆவான். அதேபோல இந்த மனசும் பிரகாசமாக இருக்கக்கூடிய வஸ்துதான். ஆனால், என்ன ஆகின்றதெனில், எப்படி சந்திரனானது ஒவ்வொரு பிறையாக வளர்ந்து வளர்ந்து பூர்ண சந்திரனாக பௌர்ணமி அன்று பிரகாசிக்கின்றது. பூர்ண சந்திரனாக பிரகாசிக்கின்ற சந்திரன்தான் உண்மையான சந்திரன். ஆனால், என்ன ஆகிறதெனில் திரும்ப அப்படியே கொஞ்சம் கொஞ்சம் குறைந்து தேய்ந்து தேய்ந்து கிருஷ்ண பட்சத்தில் தேய்பிறையில் அமாவாசையில் சந்திரனே இல்லாததுபோல் ஆகிவிடுகின்றது. ஆனால், உண்மையில் சந்திரன் இருக்கிறது. இல்லாமல் இல்லை. இப்படி ஆவதற்குக் காரணம் அந்த சந்திரனில் ஏற்படுகின்ற வளர்பிறையும் தேய்பிறையுமே ஆகும். இப்போது இதை அப்படியே நம்முடைய மனதிற்கு சரிசமமாக வைத்துப் பார்க்க வேண்டும்.

நம்முடைய சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றது. நம்முடைய மனதை சந்திரனாகவும், ஆத்மாவை சூரியனாகவும் சொல்வதுதான் வழக்கம். ஜோதிடத்திலேயும் அப்படித்தானே சொல்லப்படுகின்றது. ஆத்மகாரகன் சூரியன். மனோகாரகன் சந்திரன். நம்முடைய மனதை நாம் சந்திரனோடு வைத்துப் பார்க்கும்போது, நம்முடைய மனமானது ஆத்மா என்கிற நம்முடைய சொரூபத்தில் நிலைத்து நிற்கின்றதெனில், பௌர்ணமி மாதிரி பிரகாசமாக இருக்கும். அதுதான் மனதினுடைய உண்மையான நிலையே இதுதான். மனமேவ மனுஷ்யானாம் காரணம்… மந்த மோட்ச யோஹோ… என்று இதற்கு முன்பு பார்த்தோம். பந்தத்திற்கும் இந்த மனம்தான் காரணமாகின்றது. மோட்சத்திற்கும் இந்த மனம்தான் காரணமாகின்றது. நம்முடைய ஆத்மாவினுடைய செயல்படக்கூடிய பகுதியாக இருந்த மனம் இருக்கிறது. இந்த மனதானது அதனுடைய சொரூபத்தோடு நின்று விட்டால் அது பௌர்ணமியாகத்தான் இருக்கும். ஆனால், இங்கு நடக்கிறதெனில், நம்முடைய அனாதி கர்ம வாசனைகளினால், ஜென்ம ஜென்மாந்திரமாக நாம் வைத்திருக்கக்கூடிய இந்த கர்ம வாசனைகளின் தாக்குதல்களினால் அஞ்ஞான விருத்தி அங்கு ஏற்படுகின்றது. அஞ்ஞானம் என்கிற இருள் வந்து பீடிக்கும்போது என்ன ஆகிறதெனில், பிரகாசமாக பௌர்ணமியாக இருந்த மனம் என்ன ஆகிறதெனில், அஞ்ஞான விருத்திகளினால் ஏற்படுகின்ற வெவ்வேறு செயல்பாடுகளினால் மனமானது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து தேய்ந்து போகிறது.

எப்படி ஒரு சந்திரனானது பௌர்ணமியிலிருந்து தேய்ந்து அமாவாசையை நோக்கி, இருள் நோக்கிப் போகின்றதோ அதேபோன்று இந்தப் பதினைந்து அசுரத் தலைவர்களின் அஞ்ஞான விருத்தியினால் நம்முடைய மனமும் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இருளை நோக்கி தேய்ந்துகொண்டே இருக்கிறது. இப்போது அம்பிகை என்ன செய்கிறாளெனில், இப்படி அஞ்ஞானத்தினால் இந்த மனமானது பாதிப்படைவதைப் பார்த்து இது பண்டாசுரனின் பதினைந்து சேனைத் தலைவர்கள் செய்யும் வேலை என்று அறிகிறாள். இந்தப் பதினைந்து சேனைத் தலைவர்களை அழிப்பதற்காக ஞான விருத்திகளாக இருக்கக்கூடிய நித்யா தேவதைகளை அம்பாள் அனுப்புகிறாள். இந்த திதி நித்யா தேவதைகள் இங்கு ஞான விருத்திகளாக செயல்பட்டு, சுக்ல பட்சம் என்கிற வளர் பிறைபோல் வந்து தேய் பிறையாக இருக்கக்கூடிய பதினைந்து அசுரத் தலைவர்களை அழித்து விடுகிறாள். ஒரு சந்திரனில் என்னவொரு வளர்பிறை தேய்பிறை நடக்கின்றதோ, நம் மனமானது நல்ல விருத்திகளோடும், தீய விருத்திகளோடும் மாறிமாறி நிகழ்ந்தபடி உள்ளன. அப்போது சந்திரனில் நடக்கக்கூடிய சுழற்சி இருக்கிறதல்லவா அது நம்முடைய மனதிலேயும் நடக்கின்றது. இப்போது அம்பிகையானவள் இந்த ஞான விருத்திகள் மூலமாக, மனதிலுள்ள தீய விருத்திகளான அஞ்ஞான விருத்திகளை அம்பாள் சம்ஹாரம் செய்கிறாள். யாரை வைத்து சம்ஹாரம் செய்கிறாளெனில், பதினைந்து நித்யா தேவிகளை வைத்துச் செய்கிறாள்.

அப்போது ஒரு சாதகனின் மனதில் ஏற்படக்கூடிய ஒரு விஷயத்தை காண்பித்துக் கொடுப்பதுதான் இந்த நாமம். இன்னும் கொஞ்சம் கூர்மையாகப் பார்ப்போம். ஒரு சாதகன் அத்யாத்மமான உபாசனைக்குள் வரும்போது என்ன ஆகிற தெனில், அவனுடைய மனதில் இருக்கக்கூடிய அஞ்ஞான விருத்திகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகின்றது. எப்படி அழிக்கப்படுகின்றதெனில், ஞான விருத்திகள் மூலமாக அழிக்கப்படுகின்றது.ஒரு கட்டத்தில் அவனுக்கு தேய் பிறையே இல்லாமல் ஆகிவிடுகின்றது. இப்போது தேய்பிறையே இல்லாத சந்திரனைப் பார்த்தால் எப்படி இருக்குமோ. அதுபோல ஜீவனுடைய அஞ்ஞானத்தை அழித்துவிட்டால், இந்த மனதில் ஞான விருத்திகள் மட்டும்தான் இருக்கும். அந்த ஞான விருத்திகள் மூலமாக இந்த மனமானது ஒரு refined state ஐ அடையும்போது அந்த மனமானது தன்னுடைய மூல சொரூபமான, ஸ்வ சொரூபத்தோடு போய் ஒன்றிவிடுகின்றது.

எப்படியெனில், ஒரு சந்திரனானது சதா காலமும் சூரியனுடைய அந்த வெளிச்சத்தை உள்வாங்கியபடியே இருக்குமோ அதுபோன்று நம்முடைய மனசும் நம்முடைய ஆத்மாவில்போய் ஒன்றி விடுகின்றது.. அங்கு தேய்பிறைக்கு இடமே இல்லை. இந்த தேய்பிறையாக வந்த அஞ்ஞான விருத்திகளாக வந்த பதினைந்து அசுரத் தலைவர்களையும், பதினைந்து திதி நித்யா தேவதைகள் வந்து அழித்து விட்டார்கள். அப்போது அங்கு பௌர்ணமியாக ஜொலிக்கின்றது. இந்த நிலையை அம்பாள் நமக்கு அருள்கிறாள். அப்படி அருள்வதோடு மட்டுமல்லாமல், இந்த திதி நித்யா தேவிகள் செய்த போரைப் பார்த்து அம்பிகை சந்தோஷப்படுகின்றாள். ஸமுத் ஸுகா… என்று சந்தோஷப்படுகின்றாள். அந்த அம்பாள் படக்கூடிய சந்தோஷம்தான் ஆத்மானந்தம். இதுக்கு முன்னால் சொல்லப்பட்ட நாமத்தில் கூட, பண்ட சைன்ய வதோத்யுக்த சக்தி விக்ரம ஹர்ஷிதா… என்றெல்லாம் பார்த்தோம். அதேபோல இந்த நாமத்தில் வரும் வார்த்தையான ஸமுத் ஸுகா… என்றால் சந்தோஷப்படுகிறாள் என்று அர்த்தம். அந்த சந்தோஷம் நமக்கு எதைக் காண்பித்துக் கொடுக்கிறதெனில், ஆத்மானந்தத்தை காண்பித்துக் கொடுக்கிறது.
இது இந்த நாமாவினுடைய விஷயம். இதையும் தாண்டி இந்த நாமாவில் முக்கியமான இன்னொரு சூட்சுமமான விஷயம் இருக்கிறது.

இந்த நிலையைத்தான் அனைவரும் அடைய வேண்டும். ஆனால், இந்த நிலையை அடைவதற்கான சாதனை என்ன? நாம் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டுமென்று ஒரு யோசனை வருகின்றதல்லவா? ஆனால், நம்மால் ஒன்றும் செய்வதற்கில்லை. இந்த limitationல் இருக்கக்கூடிய நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆத்ம சொரூபமாக இருக்கக்கூடிய அம்பாள்தான் நம்மைச் செய்ய வைக்க வேண்டும். என்ன செய்ய வைப்பாள் என்பதை இந்த நாமத்தில் முக்கியமான வார்த்தையைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். நிரீக்ஷண ஸமுத் ஸுகா… நிரீக்ஷணம் என்கிற வார்த்தை இருக்கிறது. நிரீக்ஷணம் என்றால் பார்த்தல் என்று அர்த்தம். ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கு நிரீக்ஷணம் என்று பெயர். இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து சொன்னால், ஒரு விஷயத்தை focus செய்து பார்த்தால், அதற்குப் பெயர்தான் நிரீக்ஷணம் என்று பெயர். ஒரு நிலைப்பட்டு முழு ஏகாக்கிரகமாக பார்த்தல். அப்படிப் பார்க்கும்போது to see என்பது மாறி, to observe என்று ஆகிவிடுகின்றது. நிரீக்ஷணம் என்பது எதை காண்பித்துக் கொடுக்கிறதெனில், observation ஐ காண்பித்துக் கொடுக்கின்றது. இப்போது மனதில் நடக்கக்கூடிய வளர்பிறை, தேய்பிறையாக அஞ்ஞான விருத்திகளினால் இந்த மனம் பாதிக்கப்படும்போது, இந்த சாதகனை அம்பிகை என்ன செய்ய வேண்டுமென்று தூண்டுவாள் என்பது தெரியுமா? Observe செய்யச் சொல்கிறாள்.

அனைத்து ஞானிகளும் சொல்லுகின்ற observe yourself… என்கிற மகாவாக்கியம்தான் அது. இந்த observationதான் நிரீக்ஷணம். நாம் observation பண்ணும்போது இந்த மனதிலிருக்கக்கூடிய அஞ்ஞான விருத்திகளெல்லாம் dissolve ஆகும். When you observe something, its just dissolves… என்கிறார். ஜே. கிருஷ்ணமூர்த்தி. அப்போது இந்த அஞ்ஞான விருத்திகளெல்லாம் எப்போது மறைகின்றதெனில், இவனுடைய observation கூடும்போது மறைகின்றது. ஒருமைப்பட்ட மனதோடு மனதை நாம் கவனிக்கத் தொடங்கினாலேயே அங்கு அஞ்ஞான விருத்திகள் மறையத் தொடங்கும். ஈக்ஷணம் என்றால் பார்ப்பது, நிரீக்ஷணம் என்றால் கூர்மையாகப் பார்த்தல். நம்முடைய மனதிற்கே அந்த observationஐ அம்பாள் கொடுக்கிறாள். அதற்குப் பிறகு அந்த மனதில் என்ன வந்தாலும் அது ஞானமாக மாறிடும்.

அப்போது இந்த இரவு நேரத்தில், அஞ்ஞான விருத்தி என்கிற தேய்பிறை மாதிரி வந்த இந்த பதினைந்து அசுரத் தலைவர்களையும் , வளர்பிறையாக வந்த நித்யா தேவதைகள், சம்ஹாரம் செய்து இந்தப் பௌர்ணமியாக நம் மனது பிரகாசிக்கிறது. அப்படி பிரகாசிக்க வைப்பதற்கு அம்பாள் நமக்கொரு சாதனை கொடுக்கிறாள். அதற்குப் பெயர்தான் கவனித்தல். Observation. நாம் இங்கு பேசக்கூடிய எல்லாவித தியானத்திற்கும் இந்த observation தான் அடிப்படை. அதனால்தான் ஞானிகளுக்கு ரிஷிகளுக்கே seer என்று சொல்கிறோம். To see clearity. இன்னும் சொல்லப்போனால், when we start to observe something clearity comes. நாம் observe பண்ணும்போதுதான் clearity வரும். அந்த observation ஐ கொடுப்பதுதான் இந்த நாமத்தினுடைய விஷயமே. இந்த திதி நித்யா தேவிகளின் மூலமாக இதை காண்பித்துக் கொடுக்கிறாள். இதில் இன்னொரு விஷயம் என்னவெனில், வளர்பிறைக்கு பதினைந்து நித்யா தேவிகள் இருப்பதுபோல் தேய்பிறைக்கும் இருக்க வேண்டுமல்லவா… அப்படி இல்லையே… இதே தேவியரை நாம் பின்னோக்கி ஆராதனம் செய்ய வேண்டும். ஏனெனில், அங்கு தேய்பிறையே இல்லை என்று அர்த்தம். அங்கு வளர்பிறை மட்டுமே இருக்கின்றது. அது எப்போது பௌர்ணமியை நோக்கியே நகர்கின்றது. அந்த நிலவு எப்போதும் சூரியன் எனும் ஆத்மாவை அம்பிகையை நோக்கி மட்டுமே இருக்கிறது. நாம் இந்த நாமத்திற்கான கோயிலாக திருக்கடையூர் அபிராமி அம்பாள் ஆலயத்தை சொல்லலாம். ஏனெனில். அபிராம பட்டருக்காக தை அமாவாசையை பௌர்ணமியாக்கியவளே இந்த அபிராமி. எனவே, இந்த நாமத்திற்கானஆலயமாக திருக்கடையூர் அபிராமி அன்னையின் ஆலயத்தைச் சொல்லலாம்.
(சுழலும்)

The post மனதைப் பௌர்ணமியாக மாற்றும் நாமம் appeared first on Dinakaran.

Read Entire Article