ஜே.இ.இ. மெயின் 2025; முதல் இடம் பிடித்த மாணவருக்கு ஓம் பிர்லா நேரில் வாழ்த்து

4 weeks ago 6

கோட்டா,

2025-ம் ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு 2 கட்டங்களாக ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டதில், அகில இந்திய அளவில், ஒடிசாவை சேர்ந்த ஓம் பிரகாஷ் பெஹேரா என்ற மாணவர் முதல் இடம் பிடித்துள்ளார்.

அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்த பெருமைக்குரிய வெற்றியை பெற்றதற்காக வாழ்த்துகள். இந்த சாதனை, கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்திற்கான ஓர் எடுத்துக்காட்டு மட்டுமின்றி கோட்டாவின் கல்வி கலாசாரத்தின் வாழும் வெளிப்பாடு ஆகும் என தெரிவித்து உள்ளார்.

பிரகாஷின் இந்த வெற்றிக்கு பின்னால் உள்ள அவருடைய பெற்றோரின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. இந்த பெருமை தரும் சாதனைக்காக பிரகாஷ், அவருடைய பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கோட்டா கல்வி மையங்களுக்கும் மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட ஓம் பிர்லா, இந்த மைல்கற்கள், வருங்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து உந்துதல் ஏற்படுத்தும் என நம்பிக்கையும் வெளியிட்டார்.

100 சதவீதத்துடன் முதல் 24 இடங்களை பிடித்தவர்களில் ராஜஸ்தான் மாணவர்கள் (7 பேர்) முன்னிலையில் உள்ளனர். தொடர்ந்து மராட்டியம் (3 பேர்), தெலுங்கானா (3 பேர்), உத்தர பிரதேசம் (3 பேர்) மற்றும் மேற்கு வங்காளம் (2 பேர்) அடுத்தடுத்து உள்ளனர்.

இந்த தேர்வில், தேவ்தத்தா மஜ்ஜி (மேற்கு வங்காளம்), சாங் மனோக்னா குதிகொண்டா (ஆந்திர பிரதேசம்) ஆகிய 2 மாணவிகளும் உள்ளனர். இந்த தேர்வானது சிங்கப்பூர், தோஹா உள்ளிட்ட 15 சர்வதேச இடங்களுடன் 300 நகரங்களில் 13 மொழிகளில் நடைபெற்றது.

Read Entire Article