சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ‘தமிழை உலகுக்கும், உலகைத் தமிழுக்கும்’ என்ற இலக்குடன் தமிழ்நாடு அரசு சென்னைப் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. உலக அளவில் மிகப் பெரிய பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த பன்னாட்டு புத்தக கண்காட்சியில் உலக நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள், தனியார் பதிப்பாளர்கள் மற்றும் மொழி பெயர்ப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
பிராங்க்பர்ட் புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக புத்தக அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சியில் பிரத்யேகமாக அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை 16ம் தேதி ஜெர்மனி நட்டுக்கான இந்திய அரசின் துணைத் தூதர் பி.எஸ். முபாரக் திறந்து வைத்தார்.
தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தனிச்சிறப்பான இலக்கிய வளத்தின் செழுமையையும், பெருமைகளையும் உலகளவில் பரவச் செய்யும் நோக்கிலும், 2025ம் ஆண்டில் நடக்க இருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் வெளிநாடுகளை சேர்ந்த அரசு நிறுவனங்கள், பதிப்பாளர்கள் மற்றும் மொழி பெயர்ப்பு வல்லுநர்களை நேரில் சந்தித்து அழைக்க தமிழ்நாடு அரசின் சார்பில் 6 பேர் கொண்ட குழு பிராங்க்பர்ட் புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளது.
இந்த குழு, தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியம் குறித்தும் பன்னாட்டு பதிப்பாளர்களிடம் எடுத்துரைக்கும். மேலும் சர்வதேச பதிப்புத்துறை முன்னேற்றங்கள் குறித்தும் அறிந்து வரும். இந்த ஆண்டில் நடக்கும் பிராங்க்பர்ட் பன்னாட்டு புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு சார்பில் பொது நூலக இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநருமான முனைவர் சங்கர், தலைமையில் இணை இயக்குநர் சரவண சங்கரன், பொது நூலகத்துறையின் இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.
The post ஜெர்மன் பன்னாட்டு புத்தக கண்காட்சியில் சங்கர் ஐஏஎஸ் தலைமையில் 6 அதிகாரிகள் பங்கேற்பு: தமிழ்நாடு அரங்கு அமைப்பு appeared first on Dinakaran.