ஜெய்ஸ்வால், கில் இல்லை.. இவர்தான் இந்தியாவின் அடுத்த சேவாக் - ஹர்பஜன் சிங்

3 hours ago 2

மும்பை,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 248 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வெறும் 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாகவும் வருண் சக்ரவர்த்தி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விவ் ரிச்சர்ட்ஸ், சேவாக், டிராவிஸ் ஹெட் ஆகியோர் வரிசையில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் டாப் 3 இடங்களில் இந்தியாவுக்காக பேட்டிங் செய்யும் காலத்தை தாம் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் ஹர்பஜன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவர்கள் (ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மன் கில்) இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களாக இருக்கும் காலத்திற்காக நான் ஆவலுடன் உள்ளேன். அவர்கள் மூவரும் டாப் ஆர்டரில் விளையாடும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஒருவேளை அடுத்த 6 மாதங்களில் அந்த மூவரும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடுவதை நாம் பார்க்க முடியும். அபிஷேக் சர்மாவை நாம் டெஸ்ட் அணியிலும் பார்க்க முடியும். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர். ரஞ்சி கோப்பையில் அவர் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

தன்னுடைய நாளில் அவர் போட்டியை எதிரணியிடமிருந்து பறிக்கக் கூடியவர். டிராவிஸ் ஹெட் அதை செய்கிறார். வீரேந்திர சேவாக், விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரும் அதைச் செய்தார்கள். இவர்களைப் போன்ற வீரர்கள் போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்லக் கூடியவர்கள். எனவே அபிஷேக் சர்மாவுக்கு இன்று அல்லது நாளை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கி போட்டியை எதிரணியிடமிருந்து பறிக்கும் சேவாக் போன்ற வீரர் உங்களுக்கு எப்போதும் தேவை. அது அபிஷேக் சர்மாவாக இருக்கக் கூடும்" என்று கூறினார்.

Read Entire Article