திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தென்முடியனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மகன்கள் வாசு (வயது 55), புருஷோத்தமன் (53). தந்தை பாலு இறந்த நிலையில், அவருக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் இருந்தது. மகன்கள் இருவரும் தங்களுக்குள் பிரித்து கொண்ட நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இதுதவிர பாலுவின் பெயரில் 50 சென்ட் நிலம் உள்ளதாம். அந்த நிலத்தை பிரித்து கொடுக்காமல் அண்ணன் வாசு மட்டும் பயிர் செய்து வந்தாராம்.
இதனை புருஷோத்தமன் பிரித்து கொடுக் கும்படி ஏற்கனவே கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வாசு தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த புருஷோத்தமன், நிலத்தை எனக்கு பிரித்து கொடுக்காமல் நீயே அனுபவிக்கிறாயா? என கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, ஆத்திரம் அடைந்த வாசு அருகில் இருந்த மண் வெட்டியை எடுத்து தம்பி என்றும் பாராமல் புருஷோத்தமனின் தலையில் வெட்டியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் புருஷோத்தமன் மயங்கி விழுந்தார். உடனே அருகில் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த கிராம மக்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள், புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக தண்டராம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாசுவை கைது செய்தனர். சொத்து தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.