கோபி: ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி கோபியில் உள்ள அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையனிடம் நிருபர்கள், எடப்பாடி பழனிசாமி ஆடும், ஓநாயும் ஒன்று சேர முடியாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார், யார் ஆடு, யார் ஓநாய் என்று கேட்டபோது, ‘‘அது அவர் தெரிவித்த கருத்து. அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’’ என மழுப்பலான பதிலை தெரிவித்துவிட்டு சென்றார். எடப்பாடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது ஜெயலலிதா பிறந்த நாள் விளம்பரங்களிலும் அவரது பெயரை தவிர்த்துள்ளார்.
செங்கோட்டையன் வெளியிட்ட விளம்பரங்களில் எடப்பாடியின் படம் இடம் பெற்ற போதிலும் அவரது பெயரை குறிப்பிடாமல், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைக்க சூளுரை ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, எடப்பாடிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவையும் கட்சி நிகழ்ச்சிகளையும் புறக்கணித்த செங்கோட்டையன், எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பெயரை தவிர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* எடப்பாடிதான் ஓநாய் :எம்எல்ஏ அய்யப்பன் தாக்கு
திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நேற்று பேட்டியளித்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், ‘‘எடப்பாடி பழனிசாமி ஓநாயுடன் வெள்ளாடு சேரமுடியாது என கூறியுள்ளார். ஆமாம், ஓபிஎஸ் வெள்ளாடு. அவர் வெள்ளந்தியாக வாழ்பவர். ஜெயலலிதா அடையாளம் காட்டியவர். சசிகலா காலில் விழுந்து முதல்வரான எடப்பாடிதான் ஓநாய் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, ஓநாயுடன் வெள்ளாடு சேர்வது மிகவும் அரிது. அதனை எடப்பாடி தனது வாயிலேயே சொல்லிவிட்டார். சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது’’ என்றார்.
The post ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பரத்தில் பெயர் தவிர்ப்பு ஆடும் ஓநாயும் யார், யார்? எடப்பாடியிடமே கேளுங்கள்: செங்கோட்டையன் மழுப்பல் appeared first on Dinakaran.