
சென்னை,
சென்னையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு. முன்பு இருந்த வரியே தற்போது ஜிஎஸ்டி-யிலும் உள்ளது. ஜிஎஸ்டி வரி - மோடி தனியாக மக்களுக்கு வரி விதிப்பது போல் பேசப்படுகிறது. ஜிஎஸ்டிக்கு பிறகு தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருள் மீது வரி விதிக்கப்படுகிறது என கூறுவது தவறு. ஜிஎஸ்டி.,க்கு முன்பு இருந்ததை விட தற்போது வரி குறைந்துள்ளது.
ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அனைவருடைய கருத்துக்கள் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி விவகாரத்தில் என்னால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. மற்ற மாநிலங்களில் இல்லாத சாதி கொடுமை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. சாதி ரீதியான பிரச்சினை தமிழகத்தில் இன்றும் உள்ளது. தமிழ்நாட்டில் அரசு சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு திமுகவின் வெற்றி என்று கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறை செய்யப்பட்ட பிறகுதான் தமிழ்நாட்டில் இருந்து இன்னும் சில பிரிவு மாணவர்களுக்கு குடிமைப் பணிகளில் வாய்ப்பு கிடைத்தது. 1950 முதல் 2011 வரை தமிழ்நாட்டில் இருந்து சுமார் 600 பேர்தான் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வாகி இருந்தனர். ஆனால், 2011 முதல் தற்போது வரை 900க்கும் மேல் தேர்வாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை எப்போதும் உயர்ந்து கொண்டுதான் உள்ளது, குறைந்ததில்லை. ஆனால், இது போதாது. இளைஞர்கள் இன்னும் நிறைய பேர் குடிமைப் பணியில் சேர முயற்சிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறித்த கேள்விக்கு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.