வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்? - பெங்களூரு அணியுடன் இன்று மோதல்

12 hours ago 3

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மொத்தமுள்ள 70 லீக்கில் இதுவரை 51 ஆட்டங்கள் முடிந்துள்ளது. முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அடுத்து சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) இழந்து வெளியேறி விட்டன. 'பிளே-ஆப்' சுற்றின் 4 இடங்களுக்கு 8 அணிகள் இடையே குடுமிபிடி நிலவுகிறது. இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 52-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.

5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக விளையாடி வருகிறது. தொடக்க லீக்கில் மும்பையையும், 7-வது லீக்கில் லக்னோவையும் வீழ்த்தினார்கள். மற்ற அனைத்திலும் தோல்வி மயம் தான். அதுவும் உள்ளூரில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. 2 வெற்றி, 8 தோல்வி என புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள சென்னை அணி 'பிளே-ஆப்' வாய்ப்பையும் பறிகொடுத்து விட்டது. ஆனால் இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையில் நெருக்கடியின்றி ஆடுவார்கள். முடிந்தவரை புள்ளிபட்டியலில் ஓரிரு இடங்கள் முன்னேற முயற்சிப்பார்கள். பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 190 ரன்கள் சேர்த்தும் தோல்வியை தழுவியது. இருப்பினும் அதில் சாம் கர்ரன், டிவால்ட் பிரேவிஸ் ஆகியோரது பேட்டிங் திருப்திகரமாக இருந்தது. மந்தமான பேட்டிங் சென்னை அணியை பலவீனப்படுத்தி விட்டது. அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது.

பந்து வீச்சில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (15 விக்கெட்), இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது (14 விக்கெட்) ஓரளவு நன்றாக வீசுகிறார்கள். இருப்பினும் நூர் அகமது கடைசி 5 ஆட்டங்களில் 4 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு சென்னை அணி திரும்புமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

இவ்விரு அணிகள் இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 12-ல் பெங்களுருவும், 21-ல் சென்னையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

 

Read Entire Article