ஜாதகம் எதற்கு உதவும் தெரியுமா?

3 weeks ago 6

ஜாதகம் எப்படி இயங்கி பலம் தருகிறது என்பதைப் புரிந்து கொண்டால், நாம் எப்படி ஜாதக பலன்களை அனுசரித்து, நமக்குச் சாதகமாக சில விஷயங்களைச் செய்து வாழ்க்கையில் முன்னேற முடியும், சந்தோஷமாக இருக்க முடியும், பிரச்னைகள் வந்தால் சமாளிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிலர், “ஜாதக பலன்களை நாம் அனுபவித்துத்தானே தீர வேண்டும். அதை எப்படி நம்முடைய புத்தியால் மாற்றிக் கொள்ள முடியும்? என்கிற கேள்வி கேட்கலாம். அவர்களுக்கு நான் கேட்கின்ற கேள்வி ஒரே ஒரு கேள்வி இதுதான். புத்தியால் ஒரு விஷயத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்று சொன்னால், அந்தப் புத்தியை, பகுத்தறிவை, மனித ஜாதிக்கு இறைவன் கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே!
அப்படியானால், அவன் கஷ்டங்களையும் கொடுக்கின்றான்.

அந்த கஷ்டங்களில் இருந்து மீளுகின்ற முயற்சியையும் செய்யச் சொல்கிறான், அப்படி மீள்வதற்கான வழிமுறைகளையும் கொடுத்திருக்கிறான் என்றுதானே பொருள். தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு விஷயத்தை சொன்னதாகப் படித்திருக்கிறேன்.சீட்டாட்டத்தில் (ரம்மி) உங்களுக்கு விழுந்த சீட்டுகளை போல உங்கள் பிறந்த நிலை (ஜாதகம்). ஆனால், நீங்கள் எப்படி விளையாடி ஜெயிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் என்பார். நல்ல சீட்டுகள் விழுந்து தோற்பவர்கள் உண்டு. சுமாரான சீட்டுக்கள் வைத்து ஜெயிப்பவர்கள் உண்டு. கிரகங்கள் நம்மிடம் விளையாடட்டும். கிரகங்களோடு நாமும் விளையாடுவோம். வெற்றி தோல்வி என்பதை மறந்து ஒரு நல்ல ஆட்டத்தை ஆடினோம் என்கின்ற பெருமையாவது நமக்குக் கிடைக்கட்டுமே.

அதற்காகவாவது நாம் அந்த கிரக பலன்களைச் சரிப்படுத்துவதற்கும், இயன்றால் அப்பலன்களை, நமக்குச் சார்பாக மாற்றிக் கொள்வதற்கும் முயற்சி செய்யலாமே! குறைந்தபட்சம் அந்தக் கஷ்டத்தை கஷ்டமில்லாமல் எப்படி அனுபவிப்பது என்கிற கலையையாவது தெரிந்து கொள்ளலாமே. ஜாதகம் என்பது ஒரு கிரிக்கெட் விளையாட்டில் ஃபீல்டிங் (Fielding) போல என்று எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள்தான் ஆடப்போகின்றீர்கள். அதற்குத்தான் மனிதப் பிறவியை எடுத்திருக்கின்றீர்கள். கையில் உங்களிடம் மட்டை இருக்கின்றது. இப்பொழுது கிரகங்கள் மாறி மாறி உங்களுக்கு பந்து (பௌலிங்) போடுகின்றன.அவைகளை நீங்கள் தடுத்து ஆட வேண்டும்.

இதுதான் வாழ்க்கை என்கிற விளையாட்டு. உங்களை எதிர்த்து விளையாடுகின்ற அந்த கிரகங்களின் அமைப்பு முறை உங்களுக்கு சவாலாகும் களம் (காலம்) அதுதான் ஜன்ம ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்த சாதக பாதக முறை. அதில் யார் முதல் பந்து போடப் போகிறார்கள் (பௌலர்) அதற்கு அடுத்து யார் பந்து போடப் போகிறார்கள் என்பதுதான் வரிசையாக வரும் தசாபுத்திகள். சில நேரங்களில் கிரகங்கள் கடுமையாக பந்து வீசும். அதை எதிர்த்து நீங்கள் விளையாட வேண்டும் என்று சொன்னால், நீங்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா! அடுத்து அந்த ஆட்டத்தை ஆடுவதில் சாதுரியம் இருக்க வேண்டும் அல்லவா! சில நேரங் களில் எப்படிப்பட்ட சாதுர்யம் இருந்தாலும், ஒரு கட்டத்தில் நீங்கள் அவுட் ஆகத்தான் செய்வீர்கள் அது பிரச்னை கிடையாது.

அவுட் ஆவதற்குள் நீங்கள் எப்படி விளையாடினீர்கள் என்பது முக்கியம். இதை கிரகங்களும் ரசிக்கும். கிரகங்கள் தருகின்ற சவாலை நீங்கள் புத்தி பூர்வமாக எதிர்கொள்ளுகின்ற பொழுது, உங்களுக்குச் சாதகமாகவே கிரகங்கள் நடந்துகொள்ளும். காரணம், உங்களை பழி வாங்குவதற்காக கிரகங்கள் ஏற்பட்டதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு கட்டாயம் தண்டனையை தந்துதான் ஆக வேண்டும் என்பது அதன் நோக்கம் கிடையாது. நீங்கள் நல்லபடியாக சவால்களை எதிர்கொள்ளுகின்றீர்கள். நேர்மையாக எதிர்கொள்ளுகிறீர்கள் என்று சொன்னால், உங்களுக்கு விளையாட்டுக்கான காலம் முடிந்ததும் அந்த கிரகங்கள் பாராட்டும்.

நன்மையைச் செய்யும். இதுதான் நாம் அதனை எதிர்கொள்ளுகின்ற முறை. சரி, பந்து போடுகின்ற அந்த பவுலர் அதாவது அந்த கிரகத்தினுடைய தசா காலம் அல்லது புத்தி காலம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் தானே ஆட்டத்தை ஆட முடியும்? அதனை நீங்கள் ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஜாதகம் சில நேரங்களில் தவறாக இருக்கும். ஆகையினால் நடைமுறையைப் பார்த்து அந்த நடைமுறைக்கு ஏற்றவாறு உங்கள் ஜாதக பலன் நடக்கிறதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்கு அடிப் படையான ஜாதக அறிவு ஒவ்வொரு வருக்கும் தேவை. உதாரணமாக, நீங்களே எதிலாவது போய் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சூழலை எதிர்கொள்ள தெரியவில்லை. சிக்கலாக்கிக் கொள்கிறீர்கள்.

உங்களுக்கு நீங்களே பல நேரங்களில் தீமையை வர வழைத்துக் கொள்கின்றீர்கள் என்றால், நிச்சயமாக உங்கள் ராசி நாதனும், ராசியும், லக்னாதிபதியும், லக்னமும் வலுவாக இல்லை என்று பொருள். உங்கள் குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும் சகோதர உரசல்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. சில கிராமங்களில், அண்ணனுக்கும் தம்பிக்கும் தகராறு நடந்து கோர்ட் வரை நிற்கும். இப்படிப்பட்ட ஜாதகத்தில் செவ்வாய் பலம் இழந்திருக்கும் அல்லது மூன்றாம் இடம் என்று சொல்லுகின்ற சகோதரஸ்தானம் பாதித்திருக்கும். அப்படி பாதித்திருந்தால்தான் இப்படிப்பட்ட விளைவுகள் நடக்கும். மூன்றாமிடமும் செவ்வாயும் (மூத்தவராக இருந்தால் 11ம் பாவமும்) சரியாக இருந்து உங்களுக்கு இப்படிப்பட்ட விளைவுகள் நடக்கிறது என்று சொன்னால், ஜாதகத்தில் ஏதோ பிரச்னை இருக்கிறது.

பிறந்த நேரம் போன்ற பல கோளாறுகள் இருப்பதற்கும் வழி இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஜாதகத்தில் இருந்து நடைமுறையைத் தெரிந்து கொள்வதைவிட, நடைமுறையிலிருந்து ஜாதகம் சரியா தவறா என்பதை தெரிந்து கொள்வதுதான் நல்லது. பெரும்பாலான ஜோதிடர்கள் உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கிறதா என்று கேட்டு, அப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்னால், நீங்கள் கொண்டு வந்த ஜாதகம் சரிதான் என்று மேற்கொண்டு எதிர்காலப் பலனைச் சொல்வார்கள். அதேபோலவே, உங்கள் நட்பு பாதிக்கப்பட்டிருந்தால் ஏழாம் இடம் சரியில்லை. புதன் சரியில்லை என்று பொருள். குடும்ப உறவு, கணவன் மனைவி உரசல் சிக்கல், நிம்மதியின்மை என்றால் ஏழாம் இடமும் சுக்கிரனும் சரியில்லை என்று பொருள்.

தந்தையோடு கருத்து வேறுபாடு இருந்தால், சூரியன் சரியில்லை ஒன்பதாம் இடம் அல்லது ஒன்பதாம் இடத்தின் அதிபதி சரியில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். தாய் இல்லாமல் இருந்தாலோ, நோய்வாய்ப் பட்டு இருந்தாலோ அல்லது உங்களோடு கருத்து வேறுபாடு கொண்டு இருந்தாலோ சந்திரனும் நான்காம் இடமும் சரி இல்லை, ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவைகள் எல்லாம் காரணங்கள். காரணங்களைத் தெரிந்து கொள்ளாமல், அந்த காரணங்களைச் சரி செய்ய முடியாது. கடந்த கால விஷயத்தில் இருந்து, ஜாதகத்தின் கிரக அமைப்பையும், அது வேலை செய்யும் அமைப்பையும், ஓரளவு புரிந்துகொண்டு, எதிர்காலத்தில் இப்படி நடக்கும் என்பதை அனுமானித்து, அதற்கு ஏற்றவாறு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு ஜாதகம் உதவும்.

பராசரன்

The post ஜாதகம் எதற்கு உதவும் தெரியுமா? appeared first on Dinakaran.

Read Entire Article