புதுடெல்லி: ‘‘வருமான வரி சலுகை, ரெப்போ வட்டி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் நுகர்வு அதிகரிக்கவும், தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் உதவி பொருளாதாரத்தை மேம்படுத்தும்’’ என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை ஆண்டு சம்பளம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என சலுகை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் வாரியத்துடன் பட்ஜெட்டுக்குப் பிந்தைய வழக்கமாக சந்திப்பில் நேற்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதைத் தொடர்ந்து அளித்த பேட்டியில், ‘‘அதிகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களுக்கான ஏப்ரல், ஜூன் மாத ஆர்டர் பட்ஜெட்டுக்கு பிறகு உடனடியாக முன்பதிவாகி விட்டதாக சில தொழில் நிறுவன தலைவர்கள் என்னிடம் கூறி உள்ளனர். இதன் மூலம் நுகர்வு மீட்சிக்கான அறிகுறிகளை தெளிவாக பார்க்க முடிகிறது.
நுகர்வு அதிகரிப்பதால் பலரும் தங்களின் முதலீடு திட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்கின்றனர். இது பொருளாதாரத்தை மேம்படுத்தும் சாதகமான அறிகுறி. வருமான வரி சலுகையும், ரெப்போ வட்டி விகிதம் குறைப்பும் நுகர்வை அதிகரிக்கவும், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கவும் உதவும்’’ என்றார்.
முன்னதாக, ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் வாரியத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘புதிய வருமான வரி மசோதாவை வரும் வாரத்தில் மக்களவையில் தாக்கல் செய்வேன். அதைத் தொடர்ந்து அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும். நிலைக்குழு பரிந்துரைகளுக்குப் பிறகு மீண்டும் இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும்’’ என்றார்.
The post வருமான வரி, வட்டி குறைப்புகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும்: ஒன்றிய நிதி அமைச்சர் நம்பிக்கை appeared first on Dinakaran.