திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளர் சிலுகுரி ஜெகதீஸ்வர். இவர் அரசிடம் இருந்து முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லத்தை அமைப்பதற்காக இடம் வாங்கினார். 12.51 ஏக்கர் பரப்பளவிலான இந்த நிலத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் விசாகப்பட்டினம் முன்னாள் எம்.பி. சத்தியநாராயணா, அவரது நண்பர்களான காடே பிரம்மாஜி, ஜி.வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து விற்றுள்ளனர். இதுகுறித்து ஜெகதீஸ்வர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள அரிலோவா காவல் நிலையத்தில், காடே பிரம்மாஜி, ஜி. வெங்கடேஸ்வர ராவ் (ஜிவி), மற்றும் சத்தியநாராயணா ஆகியோர் போலி கையெழுத்துகளைப் பயன்படுத்தி சொத்துகளை அபகரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது. இதில் வருவாய் குற்றத்தின் மூலம் காடே பிரம்மாஜி, ஜி.வெங்கடேஸ்வர ராவ், மாஜி எம்பி சத்யநாராயணா ஆகியோர் ரூ.87.64 கோடி லாபம் பெற்றனர் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அவர்களின் ரூ.44.75 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்தனர். இதில், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.42.03 கோடியாகவும், அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.2.71 கோடியாகவும் உள்ளது. எம்விவி பில்டர்ஸ் சொத்துக்களுக்கு கூடுதலாக, முன்னாள் எம்பி எம்.வி.வி.சத்யநாராயணாவுக்கு சொந்தமான சொத்துக்கள், காடே பிரம்மாஜியின் மனைவி மற்றும் ஜெகதீஸ்வரின் மனைவிக்கும் சொந்தமான சொத்துக்கள் இருப்பதாக நேற்றுமுன்தினம் அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
The post ஆந்திராவில் நிலம் மோசடி வழக்கு ஜெகன் கட்சி மாஜி எம்பியின் ரூ.44.75 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.